பாலியல் வன்கொடுமையில் சிக்கிய 12 வயது பெண்ணுக்கு நீதி வேண்டும்..! போராடத் தயாராகும் வீரமணி.

முடிதிருத்தும் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து - கொலை செய்ததாக குற்றவாளியே ஒப்புக்கொண்ட பின் விடுதலை செய்தது எப்படி? காவல்துறையும் - நீதிமன்றமும் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை நல்லதல்ல என்று கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியில் 12 வயது சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது குற்றவாளியை (கிருபானந்தன்) போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

35 சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். ஒருவர் - சம்பந்தப்பட்ட குற்றவாளி அந்தச் சிறுமியின் வீட்டிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்ததாகவும் சாட்சியாகச் சொல்லியுள்ளார். குற்றவாளியை கைது செய்யவே, மக்கள் போராட்டம் நடத்திய பிறகே குற்றவாளியை காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டாரே! குற்றவாளி, தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதன் பிறகும் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்திருப்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய ஒன்று!

பாதிக்கப்பட்டு உயிர் இழந்த அந்த அபலைப் பெண் சிறுமி - முடிதிருத்தும் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், நீதிக்குக்கூட அவர் போன்றோரிடம் மிகவும் இளக்காரமா? அரசு தரப்பில் வழக்கு சரியாக நடத்தப்படவில்லையா?

நீதிப் போக்கு இப்படி பட்டாங்கமான அநீதியாக தமிழ்நாட்டில் நடைபெற அனுமதிக்கலாமா? என்று மனம் நொந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய முடித்திருத்தும் தொழிலாளர் தோழர்கள் தங்களது சலூன்களை (முடி திருத்தகங்களை) நேற்று நாடு தழுவிய அளவில் மூடி (சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன) தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மருத்துவ நலச் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது.

இந்த வழக்கில் மேல்முறையீடு (அப்பீல்) செய்து தவறான நீதிப் போக்கைத் தடுத்து நிறுத்தி, குற்றம் இழைத்தோரை சட்டத்தின்முன் நிறுத்தி, சரியான முறையில் தண்டனை வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக ஆவன செய்யவேண்டும். அவசரமான அவசியம் என்று கூறியிருக்கிறார்.