பிரதமர் மோடி தமிழ் மொழியின் தூதராக மாறிவிட்டாரா? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்னாச்சுப்பா?

ஐ.நா. சபையில், யாதும் ஊரே என்று பேசிய பிரதமர் மோடி தமிழகத்தில் முடிந்த வரை தமிழின் புகழ் பாடி வருகிறார் என்பதுதான் ஆச்சர்யம்.


இந்தித் திணிப்பு என்று சொல்லப்படுவதை ஒட்டுமொத்தமாக மறைக்கும் வகையில் பிரதமரின் தமிழ் மோகம் உள்ளது. இன்று ஏர்போர்ட் வளாகத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பா.ஜ.க. தொண்டர்களை சந்தித்தார் மோடி. அப்போது தமிழில் பேசினார். அதன்பிறகு இந்தியா _- சிங்கப்பூர் ஹேக்கத்தான்' போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகள் வழங்கினார். 

தொடர்ந்து பேசிய அவர், ‘‘தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது; தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னையின் காலை உணவு உற்சாகம் அளிக்கக் கூடியது. தமிழ் மொழி இனிமையானது. தமிழ் நாட்டில் இருப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று பேசினார்.

அதன்பிறகு ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் தமிழ் மொழிக்கு கிரீடமே சூட்டிவிட்டார். உலகின் பழமையான மொழி தமிழ் என்றும் புகழாரம் சூட்டினார். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் நாட்டில் பா.ஜ.க.வை வளர்ப்பதில் உறுதியாக இருப்பார் என்று தெரியவருகிறது.

அடுத்து வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வாரோ?