மோடி சென்னைக்கு வர்றார்! காலையில் வேலைக்குப் போறவங்க முன்கூட்டியே கிளம்புங்கப்பா!

சீனப்பிரதமரும் இந்தியப் பிரதமரும் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் சந்தித்துப் பேச இருப்பதாக செய்திகள் இறக்கை கட்டி பறந்துவரும் நிலையில், திடீரென திங்கள் கிழமை சென்னைக்கு வருகிறார் பிரதமர் மோடி.


நாளை நடைபெறும் சென்னை ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அதோடு மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கி கெளரவிக்கிறார்.

இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பிரதமர் மோடி வழங்க உள்ளார். உலக அளவில் உள்ள மாணவர்கள், இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடுவதுதான் ஹாக்கத்தான் நிகழ்ச்சி. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த இந்நிகழ்வு தற்போது சென்னை ஐஐடியில் நடைபெறவுள்ளது.

இதற்காக நாளை காலை 9.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் பிரதமர் மோடி. அவருக்கு வழக்கப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்புகொடுக்கின்றனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக அண்ணா பல்கலைக் கழகத் திடலுக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக ஐஐடி பட்டமளிப்பு மற்றும் ஹக்கத்தான் விழாக்களில் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு ஹெலிகாப்டர் மூலமாக விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. விமானம் நிற்கும் பகுதியில் மட்டும் சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விமான நிலையத்திலிருந்து பிரதமர் பல்கலைக் கழகம் செல்வதற்காக 3 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐஐடி விழாவில் பங்கேற்பது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை ஐஐடியில் நாளை நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறேன். இந்தியாவின் சிறந்த அறிவார்ந்த மாணவர்களை பார்க்க இருக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் மூலம்தான் முக்கியப் பயணம் இருக்கிறது என்றாலும், விமானநிலையம் தொடங்கி ஐ.ஐ.டி. வரையிலான ரோட்டில் கடுமையான நெரிசல் இருக்கக்கூடும். அதனால் கூடுமான வரை மாற்றுப் பாதையை உபயோகியுங்கள்.