மீண்டும் நான் தான் பிரதமர்! பொறுத்திருந்து பாருங்கள்! மெர்சல் காட்டிய மோடி!

மீண்டும் தான் பிரதமர் பதவி ஏற்பது உறுதி என்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பலத்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.


மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேராக டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து பாஜக தலைமை அலுவலகம் சென்ற அவர் பாஜக தலைவர் அமித் ஷாவுடன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட செய்தியாளர்களை மோடி சந்தித்தது இல்லை என்பதால் இந்த செய்தியாளர் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் சந்திப்பில் வந்து அமர்ந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி கூறியது தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது இனி நான் சிறிது இளைப்பாறலாம் என்பதுதான். பாஜக சார்பில் 300க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் ஒரு கூட்டம் கூட தான் பங்கேற்றதில் ரத்து செய்யப்படவில்லை என்று கூறி பெருமிதம் தெரிவித்தார் மோடி. பிரச்சாரத்திற்கு தான் செல்லும் இடங்களில் கிடைத்த வரவேற்பை வைத்து மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை தான் தெரிந்து கொண்டதாகக் கூறினார் மோடி.

கடந்த முறை பாஜக வென்றதை விட இந்த முறை அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவித்த மோடி இதற்கு முன்பு சுதந்திர இந்தியா காணாத வரலாறாக பாஜக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். உலகக்கோப்பை கிரிக்கெட் கோவில் திருவிழா போல தேர்தலும் ஒரு ஜனநாயக விழா என்று கூறிய மோடி அந்த விழா நிறைவு பெற்றது மகிழ்ச்சியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பாஜக அரசு பறைசாற்றுவதாகவும் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து மேலும் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்வது தான் தன்னுடைய இலக்கு என்று கூறி முடித்துக் கொண்டார் மோடி. பாஜக அலுவலகத்தில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு என்பதால் கட்சியின் தலைவர் என்ற முறையில் செய்தியாளர்களின் கேள்விக்கு அமித்ஷா பதிலளிப்பார் என்றும் கூறிவிட்டு அருகே அமைதியாக அமர்ந்திருந்தார் மோடி.