நந்தினியின் தங்கச்சி நிரஞ்சனாவும் கைது! சட்டத்தைக் காப்பாற்றும் எடப்பாடி அரசு!

மக்கள் உடல்நலனுக்கு கேடு செய்யக்கூடிய குட்காவை தடை செய்துள்ளது அரசு.


அதனை விற்பவர்களையும் கைது செய்கிறது. இந்த நிலையில்தான், மதுவிற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் நந்தினி நீதிமன்றத்தில் அரசின் நிலைமையை தெளிவாக்கும்படி கேள்வி எழுப்பினார்.

உடனே நந்தினியையும், அவரது போராட்டத்துக்கு துணை நின்ற தகப்பனாரையும் தூக்கி ஜெயிலில் போட்டுவிட்டனர். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தகவல் தெரிந்தும் தண்டனை வழங்கப்பட்டது. தன்னுடைய திருமணத்தை மறுத்துவிட்டு சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார் போராளி நந்தினி. போராளிகள் வீழ்வது இல்லை என்பதற்கு உதாரணமாக, மதுவிற்கு எதிராக அடுத்த போராளியாக உருவெடுத்திருக்கிறார் மாணவி நிரஞ்சனா.

ஆம், நந்தினி தங்கை நிரஞ்சனாவும் போராட்ட களத்துக்கு வந்துவிட்டார். டாஸ்மாக் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்கும் அரசையும் அதற்கு உடந்தையாக உள்ளவர்களையும் கண்டித்து மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்ற 5ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி- நந்தினியின் தங்கை நிரஞ்சனா கைது செய்யப்பட்டுள்ளார். 

நந்தினியை கைது செய்வதால் மட்டும் இந்த பிரச்னைக்கு  முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். சசிபெருமாள் மதுவுக்காக போராடினார், அடுத்து நந்தினி, இன்று நிரஞ்சனா. நாளை இன்னமும் சிலர் வருவார்கள், வெல்வார்கள்.