வரலாறு காணா வறட்சி! விதை வெங்காயத்தை விற்கும் பரிதாப விவசாயிகள்!

விவசாயிகள் விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயங்களை விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது கேட்போர் மனதை உடைப்பதாக உள்ளது.


நாமக்கல் அருகே கடும் வறட்சி மற்றும் மழையும் இல்லாத  காரணத்தால் விவசாய மக்கள் அன்றாட சாப்பாடிற்க்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் சுற்றுவட்டாரங்களில் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விதைக்காக ஆயிரக்கணக்கான மூட்டை சின்ன வெங்காயத்தை தோட்டத்தில் பரண் அமைத்து பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் போதிய மழை இல்லாததால் நிலத்தில் ஏற்கனவே விளைவித்த வெங்காயங்கள் போதுமான விளைச்சலை தரவில்லை. இதனால் அன்றாட செலவுக்கு சிரமப்படும்அவர்கள் விதைக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயத்தை வேறு வழியில்லாமல் விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள விதை வெங்காயத்தை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருடம் திறக்கப்பட்ட இருந்த காவிரி நீரும் பொய்த்து போக வெயிலில் விவசாயமும் விவசாய மக்களும் அன்றாடம் படும் அல்லல் கேட்போர் மனதை பதைக்க செய்கிறது.

விதைக்காக வைக்கப்பட்டுள்ள சின்ன  வெங்காயம் விற்கப்படும் பட்சத்தில் அடுத்த முறை விளைச்சலுக்கு விதைகள் இல்லாத நிலை ஏற்படும். இதனால் வெங்காய உற்பத்தி குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.