கார் வேண்டாம்..! பஞ்சப்படி, பயணப்படியும் வேண்டாம்..! இப்படியும் ஒரு ஒன்றிய சேர்மனா? நெகிழ வைக்கும் ராதாகிருஷ்ணன்!

நாகை மாவட்டத்தில் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலர் அரசு வழங்கும் சலுகைகளை வழங்க வேண்டாம் எனக் கூறி ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.


ஊராட்சி தேர்தலில் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் அதிமுகவுக்கு 9 பேரும், திமுகவுக்கு 6 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் திமுக உறுப்பினரின் ஆதரவோடு 10 ஓட்டுகள் பெற்று அதிமுக கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் ஒன்றியக் குழுத் தலைவராக தேர்வானார்.

ஒன்றியக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் அரசு வழங்கும் சலுகைகள் வேண்டாம் என ஒரு மனுவை நாகை ஆட்சியரிடம் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். அதில் ஒன்றியக் குழு தலைவருக்கு அரசு வழங்கும் வாகனம், எரிப்பொருள் செலவு, வீட்டிற்கு வழங்கப்படும் தொலைபேசி இணைப்பு போன்ற சலுகைகள் தேவையில்லை என குறிப்பிட்டடுள்ளார்.

மேலும் தனக்கு வழங்கவேண்டிய பயணப்படி, அமர்வுபடி தொகையை திட்டச்சேரியில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு மையத்திற்கு வழங்க வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். 1972-ஆம் ஆண்டு முதல் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார் ராதாகிருஷ்ணன்.

இவரது மனைவி அரசு ஊழியராக பணிபுரிகிறார். 4 முறை ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்த போதிலும் முதல் முறையாக ஒன்றியக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் வெளிப்படையான நிர்வாகம், ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.