அடேங்கப்பா, நாம் தமிழர் செம ஸ்பீடு… வேட்பாளர் அறிவிப்பு மட்டும் போதுமா?

பெரிய கட்சிகள் எல்லாம் கூட்டணி குறித்து யோசித்துக்கொண்டிருக்க, சீமான் மட்டும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கத் தொடங்கிவிட்டார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கை இது.


தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறோம். ஏறக்குறைய சரிபாதி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளுக்குள் (நவ. 26) எல்லாத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துத் தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கிவிடுவோம். முன்தயாரிப்புதான் எங்களுக்கு இருக்கிற ஒரே வலிமை. அதனால், முன்கூட்டியே வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடுவோம். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துதான் போட்டியிடுகிறோம்.

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியது போல், மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீட்டிற்குத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இறையாண்மை என்பதில், இறை என்றால் அரசு என்பதையும், ஆண்மை என்றால் ஆளுமை என்பதையும் குறிக்கிறது. எனவே, இறையாண்மை உள்ள எந்த அரசும் மக்கள் நலனை மட்டுமே முதன்மையானதாகக் கருத வேண்டும்.

மருத்துவ மேற்படிப்புகளில் 50% இட ஒதுக்கீட்டை பெற தமிழக அரசு ஆளுமை திறமையுடன் செயல்பட வேண்டும் அதேபோல, எழுவர் விடுதலையிலும் உறுதியான நடவடிக்கை எடுத்து அவர்களை 161வது சட்ட விதியின் படி விடுதலை செய்ய முன்வர வேண்டும். இது அவர்கள் வழிப்பற்றி ஆட்சிசெய்வதாகக் கூறும் அம்மையார் ஜெயலலிதாவின் கனவும் கூட என்பதனால் தமிழக முதல்வர், எழுவர் விடுதலையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

தமிழகச் சட்டமன்றத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கு இதுவரை பிரதிநிதித்துவமே இல்லாததுபோல பாஜகவின் வி.பி.துரைசாமி பேசுவதை எப்படி ஏற்கமுடியும்? இப்போதே 48க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள். தமிழகத்தின் ஆதிகுடிகளான சலவைத்தொழில் செய்யும் வண்ணார்கள், பானை செய்யும் குயவர்கள், முடி திருத்தும் மருத்துவக்குலத்தினருக்கு ஒரு இடமாவது பிரநிதித்துவம் உள்ளதா என்று கேட்டுச் சொல்லுங்கள்?

தமிழக அரசியல் வரலாற்றிலேயே அவர்களுக்குத் தேடித்தேடி வாய்ப்பளித்துத் தேர்தலில் நிற்க வைத்த ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். வேறு எந்தக் கட்சியாவது வாய்ப்பளித்துள்ளதா? தமிழகத்தில் பிறமொழி பேசும் மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் இடமிருக்கிறது.

ஆனால், தமிழர்களுக்கு இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டில் இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோரும் தமிழர் ஆகிவிட்டார்கள் என்று பேசினார்களே? பிறகு, ஏன் இந்தப் பிரதிநிதித்துவப் பேச்சு வருகிறது? யார் தமிழர்கள்? யார் யாரெல்லாம் தமிழர்கள்? என்று கேட்டவர்களுக்கெல்லாம் இப்போது புரிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார் சீமான்.