நீங்கள் செருப்புகள்! வெளியே தான் இருக்க வேண்டும்! கோவிலுக்கு வந்த தலித்துகளுக்கு நேர்ந்த அவமானம்!

மைசூரு: நீங்கள் எல்லாரும் செருப்புக்குச் சமமானவர்கள் என்று கூறி, தலித் மக்களை கோயிலுக்குள் வரவிடாமல் மற்ற ஜாதியினர் கொடுமை செய்துள்ளனர்.


கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் கடகா என்ற கிராமம் உள்ளது. இங்கு, ஒக்கலிகா, லிங்காயத்து ஜாதியினர் உயர் ஜாதியினராகவும், தலித் மக்கள் தீண்டத்தகாதவர்களாகவும் நடத்தப்படுகின்றனர். அங்கு கடந்த 70 ஆண்டுகளாக, இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி ஜாதி ரீதியான மோதல் நிகழ்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள கோயில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன. பணிகள் முடிந்து, புதுப்பொலிவுடன் , கடந்த ஞாயிறன்று கோயில் திறக்கப்பட்டது. அப்போது, ஊர் மக்கள்  அனைவரும் கோயிலுக்குள் செல்ல முயன்றனர்.

இதில், தலித் பிரிவைச் சேர்ந்த 35 குடும்பத்தினரும் அடங்குவர். ஆனால், அவர்களை உள்ளூர் மக்களில் சிலர் கோயில் வாசலில் நின்றபடி உள்ளே விடாமல் தடுத்துள்ளனர். அவர்களை மீறி உள்ளே நுழைய முயற்சித்தபோது, 'தலித் மக்கள் எல்லாரும் செருப்புக்குச் சமமானவர்கள், செருப்பு என்றால் கோயிலுக்கு வெளியேதான் கிடக்க வேண்டும்,' என, துவேஷமாக பேசி, தடுத்திருக்கிறார்கள்.

இதற்கு, போரே கவுடா என்ற உள்ளூர் ஆசாமிதான் முதன்மை காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அத்துடன், தங்களை கோயிலுக்குள் விடும்படி கூறி, தலித் மக்கள் கூட்டமாகச் செல்ல, அவர்களை பல தடுப்புகளை வைத்து, மற்ற ஜாதியினர் தடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தவே, அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று, இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தி, பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும், இரு தரப்பு மக்களும் கொந்தளிப்பாக உள்ளதால், அந்த ஊரில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

இதையடுத்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.