800 சவரன் தங்க நகைகள் ஸ்வாகா! முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவன பெண் ஊழியர்கள் மீது சந்தேகம்!

முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் 800 சவரன் நகைகள் மாயமாகி உள்ளது.


கோவை ராமநாதபுரம் பகுதியில் முத்தூட் மினி என்ற பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  நேற்று சனிக்கிழமை என்பதால், பிற்பகலுடன் நிறுவனம் மூடப்பட்டது. இந்த நிலையில், நிறுவனத்தில், 800 சவரன் தங்க நகைகள் மாயமாகி விட்டதாக ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே 800 சவரன் நகையுடன் மாயமாகிவிட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. எனவே அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 800 சவரன் நகையுடன் ஊழியர் மாயமாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாயமானது அனைத்துமே மக்கள் அடகு வைத்த நகை என்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து முத்தூட் மினி நிறுவனத்திற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே முகமூடி அணிந்து வந்த நபர் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக பணியில் இருந்த 2 பெண் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.