80 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்! சீரமைத்து கொடுத்து நெகிழச் செய்த முஸ்லீம்கள்!

80 ஆண்டுகள் பழமையான கோயிலை புதுப்பிக்கும் பணியில் முஸ்லீம்களும், இந்துக்களும் ஒன்றாக ஈடுபட்ட காட்சி நெகிழ செய்துள்ளது.


சமீபத்தில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில், சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதன்பேரில், காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் வெடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே புல்வாமா பகுதியில் உள்ள அச்சான் என்ற கிராமத்தில், கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக சிவன் கோயில் ஒன்று உள்ளது. இது, கடந்த 1990ம் ஆண்டுக்குப் பின், இந்துக்கள் அதிகம் இல்லாததால், பராமரிப்பின்றி இடியும் நிலையில் காணப்பட்டது. 

மகா சிவராத்திரியை முன்னிட்டு, இந்த கோயிலை உள்ளூர் முஸ்லீம்களும், காஷ்மீர் பண்டிட்கள் எனப்படும் இந்து பிராமணர்களும் ஒன்றுசேர்ந்து, புனரமைப்பு செய்துள்ளனர். முஸ்லீம்களை தீவிரவாதிகள் என்று கூறும் சூழலில், இந்துக்களுக்கு இந்த கோயில் சீரமைப்பு உதவியை செய்து தந்துள்ளதாக, உள்ளூர் முஸ்லீம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, பண்டிட்கள் சிலர் கூறும்போது, இந்து, முஸ்லீம்கள் சகோதரர்கள்தான். அதற்கு இந்த சம்பவமே சாட்சி என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தனர். போர் பதற்றத்தை ஏற்படுத்திய புல்வாமா பகுதி, இப்போது மத ஒற்றுமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்றால் அது மிகையல்ல.