பிள்ளைகளுக்கு திருமணம்! பரிசாக ஏழைகளுக்கு வீடு கட்ட இலவச நிலம்! நெகிழ வைத்த முஸ்லீம் தொழில் அதிபர்!

மகள் மற்றும் மகனுக்கு திருமணம், ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை, நெகிழ வைக்கும் கேரள பணக்காரர்.


திருவனந்தபுரம்: தனது மகள் மற்றும் மகனுக்கு திருமணம் நடைபெறும் நேரத்தில், ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்கி பாராட்டுகள் பெற்றுள்ளார் கேரள பணக்காரர் ஒருவர். 

ஆம். கேரளாவைச் சேர்ந்தவர் அஸீஸ். கோட்டயம் மாவட்டம், முண்டக்கயம் கிராமத்தில் வசிக்கும் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் நாடு திரும்பிய அஸீஸ், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, சமூக நலப் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். அத்துடன், தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.

இதற்காக, அலைந்து திரிந்து , நல்ல வரன் பார்த்து, முகூர்த்த தேதியும் குறித்த அவர், சில நாள் இடைவெளியில், ஒரே மாதத்தில் இவ்விரு திருமணங்களையும் நடத்த தீர்மானித்தார். அத்துடன், திருமணத்திற்கு வருபவர்களுக்கு மறக்க முடியாத படி ஏதேனும் பரிசு தர வேண்டும் என நினைத்தவர், தடாலடியாக ஒரு முடிவெடுத்தார். 

இதன்படி, தன் வீட்டுத் திருமணத்திற்கு வரும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை வழங்க முடிவு செய்தார். இதற்காக, தனது ஊரைச் சுற்றியுள்ள 3 கிராமங்களுக்கு, இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார். அதையேற்று, 120 பேர் அஸீஸ்க்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளனர். அவர்களில், மிகவும் கஷ்டப்படும் 35 குடும்பங்களை அஸீஸ் தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும், தலா 4 சென்ட் இடம் தர, திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, மூவாற்றுப்புழா - பூந்தாறு நெடுஞ்சாலையில் கூட்டிக்கல் அருகே உள்ள நிலத்தை தேர்வு செய்து மொத்த விலைக்கு வாங்கிய அஸீஸ்,  அதனை சரிசமமாகப் பிரித்து, குறிப்பிட்ட 35 குடும்பங்களுக்கும் கொடுத்துவிட்டார். இதனை அவர்களுக்கு பதிவு செய்து தரும் பணி தற்போதைக்கு நடைபெறுகிறது. 

இதில், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைத்து சமூகத்தினரும் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் உதவியதன் மூலமாக, சுற்றுவட்டாரத்தில் அஸீஸ் பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளார். ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்கிய சந்தோஷத்துடன் வரும் செப்டம்பரில் தனது மகன், மகளுக்கு திருமணம் செய்யும் பணிகளை அஸீஸ் தொடங்கியுள்ளார். இந்த காலத்தில் இப்படி ஒரு நல்லவரா என அவரை நினைத்து பலரும் வியப்படைந்துள்ளனர்.