கடைசி வரை முகத்தை கூட பார்க்க முடியவில்லை..! படுத்த படுக்கையிலேயே உயிரிழந்த முருகன் தந்தை..!

இராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறைவாசம் அனுபவித்துவரும் (நளினியின் கணவர்) முருகனின் தந்தை, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இன்று காலமானார்.


இராஜீவ் வழக்கில் மரண தண்டனை பெற்று, பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களில் இலங்கையைச் சேர்ந்த முருகனும் ஒருவர். இவரின் தந்தை வெற்றிவேல், 75, புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியில் உள்ள மருத்துவமனையில் கடைசியாக சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.

பின்னர் அவருடைய உடலை இத்தாவில்லில் உள்ள அவர்களின் வீட்டுக்கு குடும்பத்தினர் எடுத்துச்சென்றனர். நாளை செவ்வாய் காலையில், மறைந்த வெற்றிவேலின் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சனி இரவு வெற்றிவேலின் உடல்நிலை மோசமடைந்ததை முன்னிட்டு, கடைசிக் காலத்தில் தந்தையுடன் காணொலி அழைப்பில் பேச அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு முருகன் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.