நண்பரை கொடூரமாக கொலை செய்து ரூ.15 லட்சம் கொள்ளை! டிரைவர் வெறிச் செயல்ஸ

மும்பையில் ஒரு நிறுவனத்தின் தனது நண்பரான கணக்காளரை கழுத்தை நெறித்துக் கொன்று அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்த ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தெற்கு மும்பையில் உள்ளது தாமினி என்ற நிறுவனம். இங்கு கணக்காளராக பணிபுரிந்தவர்  ரகுராம் அத்தைல். ரகுராமிடம் நிறுவன உரிமையாளர் 15 லட்சம் ரூபாயைக் கொடுத்து நிறுவன வாடிக்கையாளர்கள் சிலரிடம் ஒப்படைக்கும் பணியைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நிறுவன் காரில் ரகுராம் போரிவில்லிக்குப் புறப்பட்டார். இவர்கள் இருவரும் நீண்ட நாள் நண்பர்கள்.

அவர் செல்ஃபோனில் பேசியதைக் கொண்டு அவரிடம் 15 லட்சம் ரூபாய் இருப்பதை கண்டுபிடித்த கார் ஓட்டுநர் ராகுல் யாதவ் ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் காரை நிறுத்தினான். அப்போது வாடிக்கையாளர் ஒருவரிடம் அவரது வீட்டுக்கு வருவதற்கான வழியை செல்ஃபோன் மூலம் ரகுராம் கேட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது காரை நிறுத்திவிட்டு பின் சீட்டுக்கு வந்த ராகுல் பெல்ட்டால் கழுத்தை நெறித்ததாகவும் இதில் ரகுராம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து காரை ஒரு மூலையில் கொண்டு விட்டுவிட்டு பணத்துடன் தப்பிச்சென்ற ராகுல் தான் தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும் எனவே வேலையில் இருந்து  விலகிக் கொள்வதாகவும் கூறிவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ரகுராம் திரும்பாததோடு, ராகுல் வேலையை விட்டுச் சென்றது நிறுவன உரிமையாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனிடையே பல்கரையடுத்த வாலிவ் காவல் நிலையத்தில் ரகுராம் இறந்தது தொடர்பான வழக்கும் பதிவான நிலையில் இருபோலீசாரும் இணைந்து செயல்பட்டு விசாரணை மேற்கொண்ட போது ராகுல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் ராகுலை கைதுசெய்து மும்பை அழைத்துவந்தனர்.