கொட்டும் மழையில் இளம் பெண் செய்த மனிதாபிமான செயல்.. நெகிழ்ந்த வாகன ஓட்டிகள்!

மும்பை: கொட்டும் மழையில் டிராபிக்கை சரிசெய்த இளம்பெண்ணிற்கு பல தரப்பிலும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதன்படி, மும்பையில் கனமழை பெய்தபோது, ஒரு இளம்பெண் செய்த காரியம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், எல்லோரும் மழைக்கு ஒதுங்கி நிற்க, வாகனங்கள் இரைந்தபடி சென்ற நிலையில், மும்பையின் மலாட் வெஸ்ட் சிக்னல் பகுதியில் கருப்பு சட்டை அணிந்த இளம்பெண் ஒருவர் திடீரென சாலையில் இறங்கினார்.

வாகனங்களை ஒழுங்குபடுத்திய அவர், பாதசாரிகள் சாலையை கடக்கவும் உதவி செய்தார்.  நீண்ட நேரம் அவர் சாலை ஒழுங்கமைப்பில் ஈடுபட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் டிராபிக் நெரிசல் குறைந்தது. 

இந்த பெண்ணின் சேவையை பாராட்டி, அவ்வழியே சென்ற ஒருவர் புகைப்படங்கள் எடுத்து, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் (@GhasPhoosDoctor) பகிர்ந்துள்ளார்.

தன்னார்வத்துடன் முன்வந்து மலாட் சிக்னல் பகுதியில் டிராபிக்கை சரிசெய்து இப்பெண் மகத்தானவர், என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.