மும்பை: ரூ.50 லட்சம் பணம் தராததால், சினிமா கம்பெனி உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய ரவுகளை பலரும் கண்டித்து வருகின்றனர்.
நடுரோட்டில் தொழில் அதிபருக்கு சரமாரி அடி உதை! பதற வைக்கும் காரணம்!

மும்பையில் உள்ள அலைட் வொர்க்கர்ஸ் யூனியன் என்பதன் தலைவராக, கரண் ராஜே பண்டால் உள்ளார். இவர், வெஸ்டர்ன் இந்தியா சினி எம்ப்ளாயிஸ் தலைவர் பிரேந்திர நாத் திவாரியிடம் இருந்து, ரூ.50 லட்சம் நிதி உதவி கேட்டுள்ளார். ஆனால், அவர் பணத்தை தர மறுத்துவிட்டார். இதற்குப் பதிலாக, புதியதாக சீரியல் தொடங்க, கரண் ராஜேவுக்கு உதவி செய்வதாக, பிரேந்திர நாத் கூறியிருக்கிறார்.
ஆனால், மே 10ம் தேதியன்று, திடீரென பண்டால், 14 பேரை அழைத்துக் கொண்டு, திவாரியின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். கேட்ட பணத்தை தரவில்லை எனக் கூறி, அவர்கள் திவாரியை அடித்து நொறுக்கினர். இதனை வீடியோவாக எடுத்து அவர்களே சமூக ஊடகங்களில் பகிர, அது வைரலாகப் பரவியது. இதன்பின், திவாரி அளித்த புகாரின்பேரில், அம்போலி போலீசார் வழக்குப் பதிந்து, பண்டால் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
''எனக்குத் தெரிந்தவர்களிடம் சீரியல் தயாரிக்க, உனக்கு பரிந்துரை செய்கிறேன் என்றுதான் சொன்னேன். ஆனால், பணத்திற்கு ஆசைப்பட்ட பண்டால் என்னிடம் இருந்து பணத்தை பிடுங்கவே திட்டம் தீட்டி வந்தார். திடீரென ரவுடிகளை ஏவி என்னை அடித்து உதைத்தார்,'' என்று திவாரி கூறுகிறார். அத்துடன், தன்னை அடித்து உதைத்து, ஒரு ஆட்டோவில் ஏற்றிச் சென்று, தெரு முனையில் இறக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.