குவாலிபயர் ஒன்! சென்னைக்கு பீதி கிளப்பும் மும்பையின் சேப்பாக் சென்டிமென்ட்!

சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை சென்னையை நான்கு முறை வீழ்த்தியுள்ள மும்பை அணியின் சென்டிமென்ட் தோனிக்கு தலைவலியாக அமைந்துள்ளது.


ஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் முதல் ப்ளேஆப் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஹைதராபாத்தில் வரும் 12ம் தேதி  நடக்க உள்ள இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும். 

சென்னையை பொறுத்தவரை கடந்த 2013 முதல் சேப்பாக்கத்தில் அந்த அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அதில் 3 போட்டிகள் மும்பைக்கு எதிரானவை. இந்தாண்டு மும்பை அணிக்கு எதிரான 2 போட்டிகளிலும் சென்னை தோல்வியடைந்துள்ளது. இந்த சென்டிமென்ட் சென்னை அணிக்கு பாதகமான அம்சமாகும். 

இருந்தாலும் அனைத்து தோல்விக்கும் சேர்த்து இன்றைய போட்டியில் சென்னை அணி பதிலடி கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் தோனியை தவிர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியான ஃபார்மில் இல்லை, கேதர் ஜாதவ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார்.  

மும்பையை பொறுத்தவரை தொடர் வெற்றிகளில் அந்த அணி பெரும் நம்பிக்கையுடன் உள்ளது. குறிப்பாக இந்தாண்டு சென்னையை அதன் சொந்த மைதானம் உட்பட 2 போட்டிகளில்  வீழ்த்திய உற்சாகத்தில் அந்த அணி உள்ளது. அந்த அணியில் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சாளர் மலிங்கா உட்பட பல வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். மேலும் இந்தாண்டு சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய  ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் அதிரடியை காட்ட முயற்சிக்க கூடும். 

இதுவரை இந்த இரு அணிகளும் 26 முறை போட்டியிட்டிருக்கின்றன. அதில் 15 முறை  மும்பையும் 11 முறை  சென்னையும் வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போட்டியை பொறுத்தவரை மும்பையின் கை தான் சற்று ஓங்கியுள்ளது.