கொட்டித் தீர்த்த கனமழை! வெள்ளத்தில் சிக்கிய ஸ்கார்பியோ! கதவை திறக்க முடியாததால் நேர்ந்த விபரீதம்!

மும்பையில் வெள்ளம் சூழ்ந்த சுரங்கத்திற்குள் காரில் சென்ற இருவரும் வெளியேறமுடியாமல் சிக்கி உயிரிழந்தனர்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பையில் ஜூன் மாதத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையைக் காட்டிலும் கடந்த இரு தினங்களில் மழை கொட்டித் தீர்த்து உள்ளது. இதன் காரணமாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. இந்தநிலையில் மலாடு கிழக்கு பகுதியை சேர்ந்த இர்பான் கான், குன்சான் ஷேக் ஆகிய இருவரும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மழை பெய்து அவர்கள் செல்லும் பாதையிலுள்ள சுரங்கத்திற்குள் தண்ணீர் தேங்கியிருந்தது. இருப்பினும் சுரங்கம் வழியாக செல்ல முயன்றவர்கள் காரை உள்ளே இறங்கிய போது வெள்ளத்தில் மூழ்கியது. ஜன்னல் முழுவதையும் மூடிவிட்டு ஏசி குளிரை அனுபவித்தபடி வந்த அவர்கள் திடீரென கார் நீரில் மூழ்கியதால் செய்வதறியாது திகைத்தனர்.

தண்ணீர் புகுந்ததால் என்ஜின் ஏர் இன்டேக் அமைப்பு பாதிப்புக்குள்ளாகி ஹைட்ரோ லாக் ஆகிவிட்டது. இதன் காரணமாக மின்சாரமும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் ஜன்னல் கண்ணாடிகளை பவர் விண்டோ வசதி மூலம் இறக்க அவர்களால் முடியவில்லை. கண்ணாடியை உடைக்க உள்ளே உபகரணங்கள் இல்லாத காரணத்தால் தண்ணீரில் மூழ்கி இருவரும் உயிரிழக்க நேரிட்டது.

இதுபோன்ற ஆபத்துகள் எப்போது வேண்டுமானாலும் நேரும் என்ற காரணத்தால் காருக்குள் விண்டோ பிரேக்கர் என்ற உபகரணத்தை வைத்துக் கொள்வது நல்லது. இருக்கையின் ஹெட் ரெஸ்ட் மூலமும் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்க முடியும்.