எடப்பாடி வீட்டை முற்றுகையிடப்போகும் முஸ்லீம்கள்! துரோகம் செய்ததா அ.தி.மு.க.?

“முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 வாக்குகளே காரணமாக இருந்துள்ளன என்று சொல்லி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட இருக்கிறது, மனிதநேய மக்கள் கட்சி.


இது குறித்துப் பேசிய எம்.எச்.ஜவாஹிருல்லா, இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது.

இந்த மூன்று நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இலங்கையில் வாழும் இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தமிழர்களும் கொடுங்கோன்மைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாமல் அதிமுக இந்த சட்டம் நிறைவேறுவதற்கு காரணமாக செயல்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா, பாரத் ரத்னா எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதாவின் கொள்கைகளை பாஜகவிடம் அடகு வைத்து நாட்டை பிளவுபடுத்தும் இந்தக் கொடிய சட்டம் நிறைவேறுவதற்கு அதிமுக காரணமாக இருந்துள்ளது..

நாட்டை மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் துண்டாடும் நோக்கத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து அதிமுக சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

இந்த பச்சை துரோகத்தைக் கண்டித்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான திரு. எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் வரும் டிசம்பர் 18ம் தேதி மாலை 3.30 மணியளவில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தவுள்ளது என்று ஜவாஹிருல்லா அழைப்பு விடுத்துள்ளார்.