சட்டை இல்லாமல் தான் வருவேன்! பெண் வழக்கில் அடம்பிடித்த முகிலன்!

கரூர்: சட்டையின்றி கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான முகிலன் தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.


தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மர்மமான முறையில் தலைமறைவானார். அவரை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்த நிலையில், திடீரென கடந்த ஜூலை 6ம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை போலீசார் பிடித்தனர். அப்போதே, தன்னைக் கொல்ல சதி நடப்பதாக முகிலன் குற்றம்சாட்டியிருந்தார். 

ராஜேஸ்வரி என்ற பெண் அளித்த பாலியல் புகாரின்பேரில் முகிலனை கைது செய்வதாக போலீசார் கூறினர். இதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன், இதுதொடர்பான விசாரணைக்கு நேற்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், விசாரணைக்கு வந்த அவர் மேல் சட்டையின்றி காணப்பட்டார்.

நீதிமன்ற வாசலில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முகிலன், என்னை சிறையில் வைத்து போலீசார் தாக்குகிறார்கள். என்னைக் கொல்ல முயற்சி நடக்கிறது. நான், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன். ராம்குமாரைப் போல என்னையும் கொன்றுவிட்டு, ஏதேனும் கட்டுக்கதைகள் பரப்பிவிடுவார்கள், என்று குறிப்பிட்டார். 

இதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலனை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்தார்.