4K ரெசல்யூசனுடன் இலவச எல்இடி டிவி! ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி!

மும்பை: மலிவான விலையில் ஹோம் பிராட்பேண்ட், இன்டர்நேஷனல் காலிங் பேக் உள்ளிட்ட சேவைகளை வழங்க உள்ளதாக, ரிலையன்ஸ் ஜியோ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திங்களன்று, மும்பையில் நடைபெற்றது. இதன்போது,  குழுமத்தின் அதிபர் முகேஷ் அம்பானி, பங்குதாரர்களிடையே பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 

ரிலையன்ஸ்  குழுமத்தின் தொலைத்தொடர்பு சேவைப் பிரிவான ஜியோவின் வர்த்தகம் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. ஜியோ சேவைக்கு இந்தியர்களிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. மாதந்தோறும், 1 கோடி வாடிக்கையாளர்களை புதியதாக ஜியோ ஈர்த்து வருகிறது.

தற்போதைய நிலையில், உலகிலேயே 2வது பெரிய தொலைத்தொடர்பு சேவையாளராக ஜியோ உருவெடுத்துள்ளது. நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 34 கோடியாக உள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய செயல்பாடுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். 

இதன்படி,   இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), ஹோம் பிராட்பேண்ட், என்டர்பிரைஸ் பிராட்பேண்ட்,சிறு, குறு நிறுவனங்களுக்கான பிராட்பேண்ட் உள்ளிட்ட சேவைகளை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். இவற்றில் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக, ஜியோஃபைபர் வரும் செப்டம்பர் 5 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன்மூலமாக, வீடுதோறும் மலிவான விலையில் ஹோம் பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும். சோதனை முறையில் நாடு முழுவதும் 5 லட்சம் வீடுகளில் ஹோம் பிராட்பேண்ட் சேவையை தற்போது ஜியோ ஃபைபர் வழங்கி வருகிறது. இதனை முழு நேர சேவையாக மாற்றுவதன் மூலம், இந்திய தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த உள்ளோம். 

இதற்கடுத்தப்படியாக, ஜியோ HD or 4K LED டிவி, ஜியோ செட்டாப் பாக்ஸ் மலிவான விலையில் தரப்படும். இது டிவி பார்க்கும் வாடிக்கையாளர்களை நம் பக்கம் திருப்பக் கூடியதாக அமையும். கேபிள் வர்த்தகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த செட்டாப் பாக்ஸ்கள், அனைத்து நவீன வசதிகளுடன் கூடியதாக இருக்கும். 

இதேபோல, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான இன்டர்நேஷனல் காலிங் பேக், வசதியை மலிவான விலையில் தர உள்ளோம். குறிப்பாக, அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு மாதந்தோறும் ரூ.500 கட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் பேக்கை ஆக்டிவேட் செய்துகொண்டு, வாடிக்கையாளர்கள் பேசி மகிழலாம். 

இதுதவிர, 2020ம் ஆண்டு முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையை இலவசமாக செய்துதரவும் திட்டமிட்டுள்ளோம். 

இவ்வாறு முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.