அன்று எண்பதுகளுக்கு உட்பட்ட காலத்தை அசை போட்டு பார்க்கையில் தாய்மை போற்றும் வகையில் எடுக்கப் பட்ட படங்கள், அதில் நடித்தவர்கள் என்று வெகு சிலவே நினைவில் நிற்கிறது. தாயாக நடிக்கும் நடிகை என்றாலே எனக்கு நினைவிற்கு வருபவர் ஒருவர்.
தமிழ் திரைப்படங்களில் தாய்மை நிலை! ஒரு உணர்வுப்பூர்வ பார்வை!

எம்.வி. ராஜம்மாவே வருவார். சிறு வயதில் ‘ தாயில்லாப் பிள்ளையில்’ இவர் நடித்த பாங்கே என் மனதில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. பிரசவத்தில் தான் பெற்ற குழந்தையோடு பிறிதொரு குழந்தைக்கும் தாயாக மாறும் நிர்பந்தம். ஆசாரம் பார்க்கும் கணவர் பாலையாவுக்கு பயந்து உண்மையை மறைக்க. அது திரிந்து பாலையா மற்ற குழந்தையை தனது என்று முடிவு செய்து இன்னொன்றை ( சொந்தக் குழந்தை ) மாட்டுக் கொட்டடியில் வளர்ந்து வர அனுமதிக்க சத்தியத்துக்கு கட்டுப் பட்டு இரண்டு பிள்ளைகள் இடையே ஆளான பிறகும் அவர் தவிக்கும் தவிப்பு அற்புதமான நடிப்பு. இப்படம் ஒருவகையில் தீண்டாமை ஒழிப்புக்கு துணை போன திரை என்றும் சொல்வர்.
அடுத்து அன்னை இல்லத்தில் பெற்ற இரு குழந்தைகளில் ஒன்று முத்துராமன் இவரோடு வளர குற்றவாளியாக நிரூபிக்கப் படாத நிலையில் தனது தந்தை எஸ்.வி.ரங்கராவ் தலை மகன் சிவாஜி வேறுபக்கம் யாரும் அறியாவண்ணம் வளர இவருக்கு ஒரு பிரத்யேகமான கதாபாத்திரம். இவரது அடக்க மான தோற்றம் படபடப் பாய் பேசினாலும் கனிவே வரும். கோபம் கூட அதிகநேரம் நிற்கமுடியாத மனம் கனிந்துருகும் நடிகையாகவே வருவார். இறுதி காட்சியில் மரணதண்டனை பெரும் கைதி தனது கணவன் என்பதை புடவை சுற்றிய பேப்பரில் பார்த்து தெரிந்து பதை பதைக்கும் நடிப்பு அருமை.
பானுமதி, சௌகார் ஜானகி இவர்கள் அன்னை திரையில். சொல்லப் போனால் பெற்றால்தான் பிள்ளையா..? என்ற கேள்விக்கு பதில் இதில்தான். தாய்மை அடையாத ஒரு பெண்ணின் தவிப்பு பானுமதியிடம் பாராட்டும்படியாக, தங்கை பிள்ளையை சொந்தம், உரிமை கொண்டாட அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தாய்மை என்ற உணர் வுக்கே துணைபோகும். வளர்ப்பவளும் தாய்மை என்பதற்கு சரி அந்தஸ்தே எனக் காட்டும் படம். இரு வேறு இயல்புகளி னின்று கதை சொல்லிச் செல்லும் ஒரு வெற்றிப் படமே.
கண்ணாம்பா... பெயரைச் சொல்லும்போதே மனோகரா வசனமே கண்முன் நிற்கும். பாராளும் ராணியாக இருந்தாலும் கணவருக்காக அவர் சுகத்துக்காக பத்தாம் பசலியாக பெற்ற மகனையே விட்டுக் கொடுக்கும் அன்னையாக வந்தவர் அந்த கணவரே பலியாகப் போகிறார் என்கிறபோதுதான் வீறு கொள்கிறார் மகனை பொங்கி எழச் செய்கிறார். அவர் பேசிய அந்த வசனமே அப்படத்திற்கு இன்னும் அச்சாரமாய் இருக்கிறது. இவர் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் தாயாராக நடித்திருந்தாலும் இவருக்கென்று தனிப்பட்ட கதை அமைப்பை இரு படங்களே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஒன்று தாய்க்குப் பின் தாரம்..இன்னொன்று நீதிக்குப் பின் பாசம். இதில் இவர் மருத்துவராக வருவார். கொலைப்பழியில் சிக்கும்போது சாட்சியில்லாமல் ஒரு மகன் அசோகன் இவரை குற்றவாளியாகப் பார்ப்பதும் இன்னொரு மகன் எம்.ஜி.ஆர். காப்பாற்ற நினைக்கும் வக்கீலாகச் செயல்படுவதும் இருவருக்கும் இடையில் அற்புதமான நடிப்பு.
அசோகனுடன் இது சத்தியம், மணப்பந்தல் தாய்மை பேச முத்திரை கொண்ட படங்களே. பத்மினி பின்னாளில், தனது தம்பியின் வளமான வாழ்விற்கு , காதலைத் துறந்து சிற்றன்னையாக எம்.ஆர்.ராதாவிற்கு வாழ்க்கைப்பட்டு பல குழந்தை களைப் பராமரித்து வளர்க்கும் பாங்கைச் சொல்வதே சித்தி திரைப்படம்.
இங்கு சொன்னவை எல்லாம் பெரும்பாலும் ஒரே வித கோணத்தில் தாய்மைப் பாசங்களை வலியுறுத்துவன. ஆனால் எண்பதுக்குப் பிறகு வந்த படங்கள் வெவ்வேறு கோணங்களைப் பிரதிபலித்தன. காலச் சுழற்சியின் மாற்றங்களை எவர்தான் முன்கூட்டி அறிய முடியும். மற்றொரு அத்தியாயத்தில் இதுபற்றி பார்ப்போம்.