10-ஆம் வகுப்பில் ஒரு மாணவன் 60 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த நிலையில் அதற்காக குறை சொல்லாமல் மகனை பாராட்டும் தாயின் பதிவு வைரலாகி வருகிறது.
சுமார் மதிப்பெண் எடுத்த மகன்! பதிலுக்கு தாய் செய்த செமத்தனமான காரியம்! சோசியல் மீடியாவில் வைரல்!

10, 11 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்களை எடுத்தால் எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டி அவர்களது பெற்றோர் அடிக்கும் எச்சரிக்கை அலாரங்கள் அங்கங்கே வழக்கமானவை. ஆனால் 60 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த ஒரு மாணவனின் தாயின் ஃபேஸ்புக் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.
வந்தனா சூஃபியா கட்டோச் என்ற அந்த தாய் தனது பதிவில், தனது மகன் 60 சதவிகித மதிப்பெண்களை பெற்றிருப்பது பெருமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவன் 90 சதவீத மதிப்பெண்கள் எடுக்கவில்லை என வருத்தப்பட ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
சில பாடங்களை படிக்க மகனின் சிரமங்களை நேரில் பார்த்தாகவும், படிக்க முடியாது என நினைத்த பாடங்களை விடாமுயற்சியுடன் படித்து இந்த மதிப்பெண்களை பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விரும்பிய வழியில் பயணித்து விரும்பியதை அடையும் அதே நேரத்தில் நகைச்சுவை கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் மறக்காதீர்கள் என்ற அந்த தாயின் பதிவு ஏகப்பட்ட லைக்குகளை அள்ளியுள்ளது.