பிரசவத்தின் போது தவற விட்ட நர்ஸ்! குழந்தை கீழே விழுந்து கைகள் முறிந்த பயங்கரம்! கதறும் தாய்! சென்னை அதிர்ச்சி!

சென்னையில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.


சென்னை ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனை அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்குகிறது. மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக திருவொற்றியூரை சேர்ந்த மாலினி என்பவர் உயிரிழந்ததாக கடந்த சில தினங்களுக்கு சர்ச்சை ஆனது. குழந்தையை பிரசவம் செய்யும்போது தவறான அறுவை சிகிச்சை செய்ததால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் செய்தனர்.  

இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவருக்கு அதே ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் ஆரோக்கிய நலன் கருதி இன்குபேட்டரில் வைத்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது.

பின்னர் 9 நாட்கள் கழித்து இன்குபேட்டரில் இருந்த குழந்தையை ஆரோக்கியமேரி பார்த்தபோது, குழந்தையின் இரு கைகளிலும் முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டிருந்ததாகவும் தலையிலும் காயமிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் குழந்தையை கையாளும்போது பயிற்சி மருத்துவர்கள் கீழே தவறவிட்டுவிட்டுள்ளதாகவும் அதனாலேயே குழந்தையின் எலும்புகள் முறிந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் மருத்துவமனை நிர்வாகம், குழந்தை பிறக்கும்போதே அதிக எடையுடன் இருந்ததாகவும் அதன் காரணமாக வெளியே எடுக்கும்போது எலும்புமுறிவு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். எனினும் தாய் ஆரோக்கியமேரி தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவமனையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.