அதிமுக அலுவலகத்தில் மோடி! தொண்டர்களை அதிர வைத்த எடப்பாடி!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் திடீரென வைக்கப்பட்ட மோடி புகைப்படத்தால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னை ராயப்பேட்டையில் உள்ளது அதிமுக அலுவலகம். ஜெயலலிதா இருந்த வரை இந்த அலுவலகத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்களுக்கு மட்டுமே அனுமதி.

அதிலும் அண்ணாவாக இருந்தாலும் சரி எம்.ஜிஆராக இருந்தாலும் சரி ஜெயலலிதா புகைப்படதை ஒப்பிடும் போது அவர்களின் புகைப்படங்கள் மிகவும் சிறியதாகவே வைக்கப்பட்டிருக்கும். ஆனால் திரும்பிய திசை எல்லாம் ஜெயலலிதாவின் பிரமாண்ட புகைப்படங்கள் இருக்கும்.

அலுவலகத்திற்கு வெளியே அதிமுக அணிகள் சார்பில் பிரமாண்ட ஜெயலலிதாவின் கட் அவுட்டுகளும் இருக்கும். இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அ.தி.மு.க அலுவலகம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அலுவலகம் உள்ளே ஜெயலலிதாவின் புகைப்படமும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன என்றால், அ.தி.மு.க அலுவலகத்தில் மோடியின் பிரமாண்ட புகைப்படம் இருந்தது. அதுவும் ஜெயலலிதா மோடியிடம் மனு கொடுப்பது போன்ற புகைப்படம் பிரமாண்டமாக இருந்தது. மேலும் வாஜ்பாயுடன் ஜெயலலிதா இருக்கும் புகைப்படமும் இருந்தது.

அதிமுக அலுவலகத்தில் பா.ஜ.க தலைவர்களின் புகைப்படம் இவ்வளவு பெரியதாக வைக்கப்பட்டிருந்ததை பார்த்து தொண்டர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நிர்வாகிகளிடம் கேட்ட போது கூட்டணி கட்சி தலைவர்கள் என்ற முறையில் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தனர்.