விமான நிலையத்தில் பன்னீரிடம் பேசிய மோடி, எடப்பாடியை புறக்கணித்தாரா?

சென்னை, ஐ.ஐ.டி. வளாக விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்துசேர்ந்தார் பிரதமர் நரேந்திரமோடி.


விமானநிலையத்தில் கவர்னர் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி, அத்தனை அமைச்சர்களும் ஆஜராகி இருந்தனர்.பிரதமருக்கு கவர்னர் முதலில் வரவேற்பு கொடுத்தபின்னர் முதல்வர் எடப்பாடி சால்வை அணிவித்து ஒற்றை ரோஜா வழங்கினார்.

அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர், அடுத்து நின்ற பன்னீரிடம் சில நொடிகள் மனப்பூர்வமாகப் பேசினார். அடுத்துவந்த தம்பிதுரையின் முதுகில் தட்டி உரையாடினார். இவர்கள் இருவரிடமும் பேசிய பிரதமர், முதல்வர் எடப்பாடியை கண்டுகொள்ளாமல் நகர்ந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. ஏற்கெனவே இடைத்தேர்தல் தொடர்பாக இன்னமும் பா.ஜ.க. முன்வந்து ஆதரவை தராத நிலையில் இந்த புறக்கணிப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இதுதவிர விமானநிலையத்திலிருந்து வெளியே வந்த மோடி, அங்கு திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்களைக் கண்டதும் சில நிமிடங்கள் பேசினார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு தமிழகம் வருவதற்கு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். மேலும் ஐ.நா.வில் தமிழின் பெருமையை உயர்த்திச் சொன்னதாகவும், இப்போது அமெரிக்கா முழுவதும் தமிழ் பற்றித்தான் பேச்சு என்று தெரிவித்தார்.

எல்லாம் சரிதான். ஆனால், இன்று காங்கிரஸ் சார்பில் ஒருசில இடங்களில் கருப்புக்கொடி காட்டப்பட்டது. அதனால், மீண்டும் கோ பேக் மோடி ஹேஸ்டேக் பிரபலமாகவே டென்ஷனில் இருக்கிறது பா.ஜ.க.