அயோத்தி தீர்ப்புக்கு தலைவணங்கும் மோடி, மறு சீராய்வுக்குச் செல்லும் வக்பு வாரியம்!

தீர்க்கவே முடியாத பிரச்னை என்று கருதப்பட்ட பாப்ர் மசூதி பிரச்னைக்கு இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் முஸ்லீம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்கவேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது. இந்தத் தீர்ப்பு குறித்து பாரதப்பிரதமர் நரேந்திரமோடி, ‘‘அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையைப் பேண வேண்டும்.

ராம பக்தியோ, ரஹீம் பக்தியோ தேசபக்தியை வலுப்படுத்துங்கள். அதற்கான நேரம் இது’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் இந்தத் தீர்ப்பு இஸ்லாமியர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

இன்றைய தீர்ப்பு பற்றிப் பேசியுள்ள சன்னி வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞர் ஜாஃபர்யப் ஜிலானி ``நாங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இந்தத் தீர்ப்பு திருப்திகரமாக இல்லை. மறு சீராய்வு மனுத் தாக்கல் தொடர்பாக விரைவில் முடிவெடுப்போம். எங்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறிய 5 ஏக்கர் நிலத்தில் எந்த மதிப்பும் இல்லை. 

நீதிபதி, நாட்டின் மத நல்லிணக்கம் பற்றியும் பல்வேறு சமூகங்களின் நம்பிக்கைகள் பற்றியும் பேசியுள்ளதை வரவேற்கிறோம். அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தில் இருக்கும் வெளி முற்றத்தைப் பற்றி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், உள் முற்றம் மீதான தீர்ப்பு திருப்திகரமாக இல்லை என்று நாங்கள் உணர்கிறோம். அமைதியான முறையில் நாங்கள் முறையிடுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.