மோடியின் அடுத்த அதிரடி, வீட்டுக்கும் ஆதார்! பினாமி சொத்துக்கு ஆப்பு வருகிறதா?

இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் ஆதார் கார்டுதான் ஆதாரம்.


அது இல்லையென்றால் ரேஷன் பொருளில் இருந்து கேஸ், வங்கிக் கணக்கு என்று எதுவும் இல்லை. இது மோடியின் வரலாற்று சாதனை என்றால், அடுத்து ஒரு சாதனைக்கு தயாராகிவிட்டாராம்.

ஆம், மனிதனுக்குப் போலவே வீட்டுக்கும் ஆதார் வழங்கப்பட உள்ளதாம். 

நாடு முழுவதும் வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி கொடுக்கும் வேலையை அஞ்சல் துறை மூலம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். இனி உங்க வீட்டுக்கு விலாசம் தேவையில்லை, வீட்டுக்கு 6 இலக்க எண் மட்டுமே இருக்குமாம். வீடு மற்றும் அலுவலகங்களுக்கு டிஜிட்டல் எண்  கொடுக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் இனி ஒவ்வொருவரின் வீட்டின் விலாசம் அகற்றப்பட்டு டிஜிட்டல் எண் பயன்படுத்தப்படும் அளவிற்கு இப்புதிய திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் கீழ் இருக்கும் தபால் துறை, இந்தியாவில் இருக்கும் அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்கு 3 இலக்க பின்கோடை அடிப்படையாகக் கொண்டு, 

6 இலக்க ஆல்பா நியூமரிக் (ஆங்கில எழுத்துகள் உடன் எண்கள்) டிஜிட்டல் எண் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம். கூகிள் மேப் வழங்குவதைப் போலத் தபால் துறை நாட்டில் இருக்கும் அசையா சொத்துக்களான அனைத்து வீடு, அலுவலகங்கள், நிலம் ஆகியவற்றுக்குத் தனித்தனியாக இ_-லொகேஷன் எனப்படும் மின்னணு முறையிலான இருப்பிட விலாசம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இப்படி அனைத்து அசையா சொத்துக்களையும் மின்னணு முறையில் இணைப்பதன் மூலம் சொத்தின் விபரம், அதன் உரிமையாளர், சொத்து வரி அறிக்கைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிவாயு இணைப்பின் விபரங்கள் என அனைத்தையும் ஒற்றைத் தளத்தில் கொண்டுவர முடியும்.

இந்த 6 இலக்க ஆல்பாநியூமரிக் எண்களை விலாசத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தும் அளவிற்கு இது உருமாறும். சொல்லப்போனால் இனி வரும் காலத்தில் விசிடிங் கார்டுகளில் விலாசத்திற்குப் பதிலாக இந்த 6 இலக்க எண் மட்டுமே இருக்கும். இத்திட்டத்தை முதல் கட்டமாக டெல்லி மற்றும் நொய்டாவில் தொடங்கப்பட உள்ளதாம்.

மத்திய அரசு திட்டங்கள், இத்தகைய முயற்சி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சரியான முறையில் நேரடியாக மக்களுக்குக் கொண்டு சேர்க்க மிகப்பெரிய அளவில் உதவி செய்வது மட்டும் அல்லாமல் பல பினாமி சொத்துகள், அரசு சொத்துக்களைக் கையகப்படுத்துவதைக் குறைக்க முடியும்.

இந்தியா போன்ற  நாடுகளில் நெருக்கமான வீடு மற்றும் அலுவலகங்களை விரைவாகக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று, அதனை எளிமைப்படுத்தும் ஒரு முயற்சிதான் தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ள திட்டம் என்று மேப் மை இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். 

இந்தச் சோதனை திட்டம் வெற்றியடைந்தால், மேப் மை இந்தியாவின் இத்திட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது.