எத்தனையோ சிக்கலான விஷயங்களை எல்லாம் அசால்ட்டாக டீல் செய்துவரும் மோடி, அமித்ஷாவுக்கு மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலில் அமரவைப்பதுதான் மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் தாக்குப் பிடிக்குமா மோடி மேஜிக்? காலை வாரத்துடிக்கும் சிவசேனா!
மொத்தமுள்ள 288 இடங்களில் பா.ஜ.க 105 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வென்றன.
ஆரம்பத்திலேயே சம பங்கு ஆட்சி என்று சிவசேனா உரிமை கோரியதால், அதனை ஏற்பதில்லை என்று பா.ஜ.க. உறுதியாக இருந்தது. அதனால், வாழ்நாள் எதிரியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வந்தது சிவசேனா.
ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய சிவசேனா, பின்னர் சோனியா சந்திப்புக்குப் பிறகு பின் வாங்கியது. அதனால் சிவசேனா பணிந்துவிடும் என்று நினைத்த நிலையிலும் பிடிவாதமாக தங்கள் கோரிக்கையிலே நிற்கிறது சிவசேனா.
.இந்தநிலையில், மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில், பா.ஜ.கவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு கொடுத்து அழைப்பு விடுத்திருக்கிறார்.
முதல்வர் பதவி இல்லாமல் பாஜகவை ஆதரிக்கப் போவதில்லை என்பதில் சிவசேனா இன்னமும் உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருந்து வருகிறது. தங்களது எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுக்க முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டிய சிவசேனா, கட்சி தாவாமல் பாதுகாக்க அவர்களை பாந்த்ராவில் உள்ள ரங்ஷரதா ஹோட்டலில் தங்கவைத்துள்ளது.
அதேநேரம், ஆளுநரின் அழைப்பு தாமதமானது எனக் கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களிப்போம் என்று உறுதியுடன் தெரிவித்திருக்கிறது.இதே பாணியில்தான் காங்கிரஸ் கட்சியும் செயல்படும் என்பதால், பதவி ஏற்றதுமே பதவியை இழக்கவேண்டிய நிலைமை பா.ஜ.க.வுக்கு ஏற்படும்.
பா.ஜ.க.வை ஹிட்லர் என்று சிவசேனா தாக்கிவருவதால், இருவரும் இணைவது கடினம் என்ற நிலையை நோக்கியே மகாராஷ்டிரா நிலவரம் உள்ளது. அதனால், இப்போதைக்கு மோடிக்கு இங்கே நேரம் சரியில்லை.