மோடி ஒரு தந்திரமான வியாபாரி! வெளுத்துவாங்கிய காங்கிரஸ் எம்.பி.!

மேற்கு வங்கத்திலிருந்து இன்றைக்கு பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக தலைவர் ராகுல் காந்தியால் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் ரஞ்சன் சௌத்ரி, ஆறாவது முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.


மோடியை இனி நாடாளுமன்றத்தில் யாரும் எதிர்த்துப் பேச முடியாது என்று நினைத்த நிலையில், இவர் பேசியதைப் பாருங்கள். ஜனநாயகம் இன்னமும் கெட்டுப் போகவில்லை என்பது புரியும். ‘"குடியரசுத் தலைவர் உரையில் ஓரிடத்தில்கூட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயர் உச்சரிக்கப்படவில்லை. நேரு பெயரை நீங்கள் உச்சரித்திருந்தால், உங்கள் மதிப்பு குறைந்துவிடப் போவதில்லை. ஆனாலும், நீங்கள் அவர் பெயரை சொல்லவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில்தான் நாட்டில் ,பசுமைப்புரட்சி, வெண்மைப் புரட்சி, தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., என்.டி.பி.சி., எஸ்.பி.ஐ.,  எச்.ஏ.எல்., என லாபம் கொட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. காங்கிரஸ்தான் இந்தத் தேசத்தின் ஆன்மா. இந்தியா என்றாலே, காங்கிரஸ்தான்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம் போன்ற பல சட்டங்களை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ்தான்.  பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினோம் என நீங்கள் பெருமையாக கூறுகிறீர்கள். 
அந்த ஏவுகணைகள் காங்கிரஸ் ஆட்சியின்போது தயாரிக்கப்பட்டவை என்பதை மறந்துவிட்டீர்கள்.

நம் பிரதமர் மிகச் சிறந்த வியாபாரி. அவரிடம் உள்ள பொருளை தந்திரமாக விற்கும் திறமை படைத்தவர். அந்தத் திறமை, காங்கிரசிடம் இல்லை. அதனால்தான் தேர்தலில் நாங்கள் தோற்றோம். நாடு முழுவதும் வறட்சி தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதுபற்றி அரசு கவலைப்படவில்லை. மோடியைப் புகழ்ந்தால், பதவி கிடைக்கும் என்பதால், பாஜக எம்.பி.,க்கள் வாய்க்கு வந்தபடி புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.’’ என்று வெளுத்து வாங்கினார் சௌத்ரி....