இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அமித் ஷா? மோடிக்கும் மாஸ் போச்சு! அஜித்துக்குத்தான் செம லக்!

காஷ்மீர் விவகாரம், முத்தலாக், அயோத்தி ஆகிய விவகாரங்களில் அசைக்கமுடியாத இரும்புக் கோட்டை என்று பா.ஜ.க.வுக்கு நல்ல பெயர் கிடைத்தது. அத்தனை பெயரையும் மகாராஷ்டிராவில் தொலைத்துவிட்டு அவமானப்பட்டு நிற்கிறது பா.ஜ.க.


தனிப்பெரும் கட்சியாக ஜெயித்துவிட்டதும் சிவசேனாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு, தனியே ஆட்சியமைக்க ஆசைப்பட்டது. அதுதான் அத்தனை பிரச்னைகளுக்கும் ஆரம்பம்.

வாழ்நாள் எதிரிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முற்பட்டது சிவசேனை. இது ஒரு கேவலமாக முயற்சி என்றால், அதைவிட கேவலமான முயற்சியை பா.ஜ.க. முன்னெடுத்தது. 

ஆம், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜித் பவாரை கைக்குள் கொண்டுவந்தது. தேசிய வாத காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைக்க வேண்டும் என்றால், சரத்பவாரை விட்டு, என்ன தைரியத்தில் அஜித் பவாரை வளைத்தார்கள் என்பதுதான் ஆச்சர்யம். அவர் மீதான் ஊழல் கேஸ்களை ஒழித்துக் கட்டுகிறோம் என்று கேவலமான வாக்குறுதியைக் கொடுத்து, அதை நிறைவேற்றவும் செய்துவிட்டார்கள்.

ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிக்க வேண்டும் என்றால் வீட்டு முதலாளியிடம் பேச வேண்டும் என்ற அடிப்படை அரிச்சுவடி கூட தெரியாமல், வீட்டு கூர்க்காவுடன் கூட்டணி போட்டதால் நான்கே நாட்களில் பதவியை இழக்க வேண்டிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது.

அரசியல் ராஜ தந்திரி, சாணக்கியர் என்றெல்லாம் அமித் ஷாவை புகழ்ந்த அதே மீடியாதான் இப்போது அமித் ஷாவை கேவலமாகத் திட்டுகின்றன. அந்த விமர்சனம் மோடிகும்தான். இந்த நான்கு நாள் ஆட்சியில் காரியம் சாதித்துக்கொண்ட ஒரே நபர் அஜித் பவார் மட்டும்தான். ஆம், அவருடைய கேஸ்கள் எல்லாமே ஊற்றி மூடப்பட்டுவிட்டன. அவரும் இப்போது தேசிய வாத காங்கிரஸிலும் இணைந்துவிட்டார்.

சூப்பர் அஜித் சூப்பர்.