அத்வானி கதையை ஒரேடியாக முடித்த மோடி அமித்ஷா கூட்டணி! காந்தி நகரில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மோடி இந்த முறை ஒரே ஒரு தொகுதிகள் மட்டுமே போட்டியிடுகிறார்.

அதேசமயம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அமித்ஷா மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். அமித்ஷா போட்டியிட தேர்வுசெய்யப்பட்டுள்ளது தொகுதிதான் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் இது நாள் வரை அத்வானி குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். தற்போதும் கூட அத்வானி காந்தி நகர் தொகுதியின் எம்பி ஆகவே உள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அத்வானி தற்போது வரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்தான் காந்திநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அமித்ஷா களமிறக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அத்வானி அரசியலில் இருந்து முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்றே கூறலாம்.

இதேபோல் லக்னோ தொகுதியில் தற்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் களமிறங்குகிறார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.