குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அலறும் இஸ்லாமியர்கள்..! தி.மு.க.வின் உதவியைக் கேட்கும் ம.நே.ம.க

முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் வாக்களிக்கக வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கடிதம் எழுதி கோரிக்கை அனுப்பியிருக்கிறார்.


நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு மக்களிடையே எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இச்சட்ட மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிமல்லாத மக்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகுக்கின்றது. இது மதரீதியான பாரபட்சம் ஆகும்.

இந்த மூன்று நாடுகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் கொடுங்கோன்மைக்கு இழக்காகியுள்ளார்கள் என்று குறிப்பிட்டு அவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற இம்மசோதா வழிவகுக்கின்றது. இந்த மூன்று நாடுகளில் வாழும் முஸ்லிம்களும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்களும் கொடுங்கோன்மைக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை இம்மசோதா கவனத்தில் கொள்ளாது மற்றொரு பாரபட்சம் ஆகும்.

நமது அண்டை நாடுகளாக உள்ள மியான்மார் மற்றும் இலங்கையைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசம் ஆகிய மூன்று நாடுகளை மட்டும் இந்த மசோதா கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பது மற்றொரு பாரபட்சமாகும். இலங்கையில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் பெற்று வாழ்கிறார்கள். அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதை நிராகரித்து இருப்பதைத் தமிழக அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சிறுபான்மை மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களை தவிர்த்து மற்ற சிறுபான்மை மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் என்று விஷமத்தனமாக நோக்கத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அசாமில் பாஜக அரசு நடைமுறைப்படுத்திய தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கையில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கண்டெடுக்கப்பட்ட 19 லட்சம் மக்களில் 12 லட்சம் பேர் முஸ்லிமல்லாதவர்கள். அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஹிந்துக்கள் என்ற பொதுவான பிம்பத்தை இந்த புள்ளிவிவரம் தகர்த்து விட்ட நிலையில் முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தவேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி எம் எஸ் கோல்வால்கரின் கட்டளையே நிறைவேற்றவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

வரலாறு காணாத அளவில் பொருளாதார சீரழிவு நாட்டை பாதித்து சில அம்சங்களில் வங்காள தேசத்தை விட மிக மோசமான நிலையில் இந்தியா இருக்கும் நிலையில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இந்த மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்ற முனைந்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான. மக்களிடையே பாரபட்சத்தைப் பாராட்டுகின்ற, இலங்கைத் தமிழர் நலனுக்கு விரோதமான இச்சட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.