தினகரனை தேடிச் சென்று திடீரென சந்தித்த ஸ்டாலின்! காரணம் என்ன தெரியுமா?

சென்னையில் டி.டி.வி தினகரனை தேடிச் சென்று மு.க.ஸ்டாலின் சந்தித்த விவகாரத்தின் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் இருப்பது தெரியவந்துள்ளது.


   கடந்த மாதம் மதுரையில் டி.டி.வி தினகரன் தங்கியிருந்த பப்பீஸ் ஓட்டலுக்கு வழியச் சென்று மு.க.ஸ்டாலின் தங்கினார். இந்த நிலையில் சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இடை நிலை ஆசிரியர்களை சந்திக்க தினகரன் சென்றுள்ளார் என்பது தெரிந்து ஸ்டாலினும் அவசர அவசரமாக அங்கு புறப்பட்டுச் சென்றார். இதற்கு காரணம் தினகரனுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஸ்டாலினின் எண்ணம் தான்.

   ஸ்டாலின் எதற்காக தினகரனை தேடிச் சென்று சந்திக்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கான பதில் தான் இந்த கட்டுரை. தற்போதைய சூழலில் தமிழக அரசியல் களத்தை பொறுத்தவரை தி.மு.கவின் நேரடி எதிரி அ.தி.மு.கவாக இருக்கலாம். ஆனால் அந்த கட்சியில் வலுவான தலைவர்கள் யாரும் இல்லை. அதே சமயம் தினகரன் அமமுக கட்சியை நடத்தி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடுகிறது. அ.தி.மு.க தொண்டர்கள் தன்னுடன் தான் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை தினகரன் உருவாக்கி வருகிறார்.

   அ.தி.மு.கவை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பது தான் தினகரனின் எண்ணமாக உள்ளது. மேலும் தினகரனின் எண்ணமும் கூட அ.தி.மு.க பாணியில் தி.மு.க எதிர்ப்பு என்று தான் இருக்க வேண்டும். ஆனால் சந்தர்ப்ப சூழல் காரணமாக அ.தி.மு.கவை எதிர்த்து  தினகரன் அரசியல் செய்து வருகிறார். இருந்தாலும் கூட தினகரனுக்கு அ.தி.மு.க தொண்டர்களின் ஆதரவு உள்ளது.

   இந்த நிலையில் அ.தி.மு.க தொண்டர்களின் அதிருப்திக்கு தினகரனை ஆளாக்குவதற்கான ஒரு வியூகமாகத்தான் அவ்வப்போது தினகரனை சந்தித்து இருவருக்கும் இடையே தொடர்பு உள்ளதை போன்ற ஒரு சித்தரிப்பை ஸ்டாலின் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த முறை மதுரையில் தினகரன் தங்கியிருந்த ஓட்டலுக்கு ஸ்டாலின் தங்கிய போதே இருவரும் ரகசியமாக சந்தித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

   இதனை பயன்படுத்தி தினகரனுக்கும் – ஸ்டாலினுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அ.தி.மு.க தொண்டர்களிடம் அமைச்சர்கள் தகவல்களை பரப்பினர். ஏனென்றால் அ.தி.மு.கவினரை பொறுத்தவரை தி.மு.க எதிர்ப்பு என்பது ரத்தத்தில் ஊறியது. தி.மு.கவுடன் தொடர்பில் உள்ளவர்களை சற்று தள்ளியே வைப்பது அ.தி.மு.கவினரின் வாடிக்கை. இந்த நெருக்கடியை அவ்வப்போது தினகரனுக்கு கொடுத்து அவரை காலி செய்வதே ஸ்டாலினின் திட்டமாகும்.

   இதனால் தான் தினகரன் நுங்கம்பாக்கத்தில் இருக்கிறார் என்று தெரிந்தும் அங்கு அவசர அவசரமாக சென்று ஒரு சந்திப்பை ஏற்படுத்தியுள்ளார் ஸ்டாலின். அதுமட்டும் இன்றி ஸ்டாலின் – தினகரன் சந்திப்பை சன் நியுஸ் தொலைக்காட்சி பிரேக்கிங்காக ஒளிபரப்பியத- இதன் மூலமே தி.மு.க இந்த விஷயத்தை எதற்காக பெரிதுபடுத்துகிறது என்று புரிந்து கொள்ள முடியும். தினகரனுக்கு எதிராக நேரடி அரசியல் செய்ய தயாராக இல்லாத ஸ்டாலின், இது போன்ற வியூகங்களால் தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.