நீ கெட்டுப் போய்விட்டாய்! தலைமுடியை வெட்டி, ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி! அதிர வைக்கும் சம்பவம்!

கயா: கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி என்றும் பாராமல், அவருக்கு தண்டனை அளித்த முட்டாள் பஞ்சாயத்து தலைவர்களுக்கு கண்டனம் குவிந்து வருகிறது.


 பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பதின்வயது சிறுமி, கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியன்று வீட்டிற்கு அருகில் உள்ள மறைவிடத்தில் இயற்கைக் கடன் கழிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவரை சில இளைஞர்கள் கடத்திச் சென்று, உள்ளூர் பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் அடைத்து வைத்து, மாறி மாறி கூட்டாக பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

அடுத்த நாள் காலையில் அங்கே வந்த பஞ்சாயத்து ஊழியர்கள், சிறுமி சின்னாபின்னமாக கிடந்ததை பார்த்து,  அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி கேள்விப்பட்டதும், உள்ளூர் பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

ஆனால், ஒழுங்காக விசாரித்து தண்டனை தரவேண்டிய பஞ்சாயத்து தலைவர்கள், மூளை கெட்ட நபர்களாக மாறி, சிறு வயதிலேயே  கெட்டுப் போய்விட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட சிறுமியின் தலைமுடியை வெட்டி, ஊர்வலம் நடத்திச் சென்றுள்ளனர்.  இதுதொடர்பாக, போலீசாரிடம் அந்த சிறுமியும், அவரது தாயாரும் புகார் அளித்ததை தொடர்ந்து, இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதன்பேரில், கயா மாவட்ட போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை  மேற்கொண்டனர். முதல்கட்டமாக, சிறுமியை பலாத்காரம் செய்தவர்களில், ஒருவரை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.