அமைச்சர் சரோஜாவுக்கு கண்ணும் காதும் அவுட்டா? தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லையாம்!

சட்டமன்றத்தில் ஒரே ஒரு வார்த்தை தவறாக பேசியதற்காக பதவியை ராஜினாமா செய்த அரசியல்வாதிகள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்தார்கள். இன்று, பதவி கையில் இருக்கிறது என்பதற்காக வாயில் வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் நம் மானமிகு அமைச்சர்கள்.


நேற்று சட்டப்பேரவையில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதற்காக 9.55 ஏக்கர் நிலப்பரப்பில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையமும் அமைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த மையம்  மூடிக்கிடக்கிறது என்று தி.மு.க.வின் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அந்த மையத்தில் பிச்சைக்காரர்களை  அடைத்து வைத்தால் சுவர் ஏறிக்குதித்து சென்றுவிடுகிறார்கள் என்று பதில் சொன்னார்.

இதையடுத்து அமைச்சர் சரோஜா சொன்னதுதான் ஹைலைட். தெரு ஓரம் இருப்பவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் கிடையாது. கையேந்துபவர்கள் தான் பிச்சைக்காரர்கள். அவர்களை போலீசார் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களும் விசாரணையில் ஒத்துக்கொண்டு,  மறுவாழ்வு மையத்துக்கு வர சம்மதித்தால் மட்டுமே இங்கு அழைத்து வர முடியும். அப்படி பார்த்தால், தமிழகத்தில் பிச்சைக்காரர்களே இல்லை என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.

ஏம்மா அமைச்சராயிட்டா காருல போகும்போது கண்ணு பார்க்காது, காது கேட்காதா..? சிக்னல், ரோட்டோரங்களில், பாலங்களுக்கு அடியில், கோயில் வாசல்களில் தட்டுக்களோடு அலைபவர்கள் எல்லாம் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர்களா என்று அமைச்சர்தான் பதில் சொல்ல வேண்டும்.