பெங்களூர் புகழேந்தியிடம் டிடிவியின் அந்த வீடியோ? கோவையில் கசியவிடப்பட்ட பகீர் மெமரி சிப் மேட்டர்!

பெங்களூரு: டிடிவி தினகரனின் முக்கிய ஆதரவாளராக வலம் வந்த புகழேந்தி தற்போது, அவருடன் நேரடி மோதலில் இறங்கியுள்ளார்.


அதிமுக.,வில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில்  தனிக்கட்சியை டிடிவி தினகரன் தொடங்கினார். ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த எம்பி தேர்தலில் அமமுக பெரிதும் சோபிக்காததால், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதன் வெளிப்பாடாக, தங்க தமிழ்ச்செல்வன் திமுக.,வில் சேர்ந்துகொண்டார். இதேபோல, கர்நாடகா மாநிலத்தின் அதிமுக பொதுச் செயலாளராக இருந்து தற்போது, அமமுக நிர்வாகியாக மாறியுள்ள புகழேந்தி, டிடிவி தினகரனுடன் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட தொடங்கியுள்ளார்.  

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோவை மண்டல அமமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய புகழேந்தி, ''பலவித வாக்குறுதிகளுடன் தொடங்கப்பட்ட அமமுக தற்போது செயலிழந்து கிடக்கிறது. அமமுகவை நடத்தும் பக்குவம் டிடிவி தினகரனிடம் இல்லை. இதனால், எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்தெடுத்த அதிமுகவை காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

18 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக டிடிவி தினகரன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது ஆதரவாளர்கள் எம்எல்ஏ பதவியை இழந்து வாடும் நிலையில் அவர் மட்டும் ஆர்கே நகர் எம்எல்ஏ பதவியை தொடர்வதில் நியாயமில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிட வேண்டும். இல்லை எனில், அமமுக காணாமல் போகும் நிலை ஏற்படும்.

சித்தி, சித்தி எனக் கூறி சிறையில் இருக்கும் சசிகலாவிடம் பல கோடிக்கணக்கான பணம் வாங்கிய டிடிவி தினகரன், அதனைச் சரியாக செலவிடவில்லை. அவரது குடுமி என்னிடம் உள்ளது. அவர் சசிகலாவை நம்ப வைத்து வாங்கிய பணத்தை எப்படியெல்லாம் வீணடித்தார் என்பதற்கான ஆதாரமாக சிப் என்னிடம் உள்ளது.

எந்த நேரத்திலும் அவர் கட்சியை கலைக்க வாய்ப்புள்ளது. சிரித்துக் கொண்டே இருக்கும் டிடிவி மிகப்பெரும் வஞ்சக ஆசாமி. எந்த நேரத்தில் என்ன செய்வார் என தெரியாது. முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலையில் அவர்களுடன் டிடிவி தினகரன் சமாதான பேச்சுவார்த்தை செய்யாமல் புறக்கணிப்பது கடுமையாகக் கண்டிக்க வேண்டிய விசயமாகும்.

இப்படியே போனால், அமமுகவில் கடைசியாக டிடிவி தினகரனும், அவரது உதவியாளர் ஜனாவும்தான் இருப்பார்கள்,'' என சராமரியாக விமர்சித்துள்ளார்.