குரூப் 4 தேர்வில் இனி தப்பு நடக்காதாம்...? எப்படி நம்புறது அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே..? அமைச்சர்கள் சிக்குகிறார்களா..?

யாரும் எதிர்பாராத வகையில், குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. இப்போது நடந்திருக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், இதே போன்று குரூப் 1, 2, 4 எனப் பல அரசுத் தேர்வாணையத் தேர்வுகளிலும் இந்த முறைகேடு நடைப்பெற்றுள்ளது உறுதியாகத் தெரிகிறது.


ஆனால், இதுவரை நடந்த முறைகேடு பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இனி நன்றாக நடக்கும் என்று உறுதி அளிக்கிறார் அமைச்சர் ஜெயகுமார். அதாவது முறைகேடாக வெற்றிப்பெற்றவர்கள்தான் இப்போது பல பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் பதவி உயர்வு பெற்று உயர் பதவிக்கு வந்துவிட்டனர்.

இனிமேல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தேவையற்ற பல குழப்பங்கள் ஏற்படும் என்ற அச்சத்தில்தான் இதனை இழுத்து மூட முயற்சி செய்வதாகப் பார்க்க முடிகிறது. ஒரே தேர்வு மையத்தில் அதிகம் பேர் மிக அதிக மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளனர் என்பதைக் கண்டு சந்தேகமடைந்து தேர்வர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையிலேயே உண்மை தெரியவந்துள்ளது. எனில் எத்தனை காலமாக இந்த முறைகேடுகள் நடைபெற்று வந்துள்ளது? என்ற கேள்வி எழுகிறது. 

இப்போது பணம் கொடுத்துள்ளதாக கருதப்படும் 99 பேரையும் கைது செய்யாமல் தடை போட்டுள்ளது அரசு. அவர்களுக்கு தடை போடுவதால் என்ன நிகழப்போகிறது? அத்தனை பேரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும். இதற்கு ஏன் தயங்குகிறது அரசு? அமைச்சர்கள் மாட்டிக்கொள்வார்கள் என்ற பயமா?