கேபிள் டிவி வசூல்! வீதிக்கு வந்த 2 அமைச்சர்களின் மோதல்! வேடிக்கை பார்க்கும் எடப்பாடி!

அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பது தொடர்பாக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் – மணிகண்டன் இடையே மோதல் வெடித்துள்ளது.


பரமக்குடியில் அமைச்சர் மணிகண்டன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன் அது குறித்து தன்னிடம் முதலமைச்சர் எதுவும் விவாதிக்கவில்லை என்றார்.

கேபிள் டிவி கார்ப்பரேசன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான உங்கள் கட்டுப்பாட்டில் தான் வருகிறது. அப்படி இருக்கையில் உங்களுக்கு தெரியாமல் எப்படி கேபிள் டிவி கட்டணம் குறைப்பு சாத்தியமாகும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எனக்கே தெரியவில்லை முதலமைச்சர் எதுவும் என்னிடம் பேசவில்லை. இனிமேல் பேசுவார் போல அல்லது ஆலோசனை கூட்டம் நடைபெறும் போல என்பது போல் பதில் அளித்தார் மணிகண்டன்.

இதன் பிறகு அமைச்சர் மணிகண்டன் கூறியது தான் அதிர்ச்சி ரகம். கடந்த வாரம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுடன் கேபிள் டிவி நிறுவன தலைவர் என்கிற முறையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார். அப்போது தனிப்பட்ட முறையில் கேபிள் டிவி வைத்திருக்கும் அனைவரும் தங்கள் கனெக்சனை உடனடியாக அரசு கேபிளுக்கு மாற்ற வேண்டும் என்றார்.

இது பல்வேறு ஆப்பரேட்டர்களை கொந்தளிக்க வைத்தது. இது குறித்து அமைச்சர் மணிகண்டன் இன்று பேசினார். அப்போது தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஆப்பரேட்டர்களை அரசு கேபிளில் இணையுமாறு உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதை அப்போது மணிகண்டன் சுட்டிக்காட்டினார்.

உடுமலை ராதாகிருஷ்ணன் அட்சயா கேபிள் விஷன் என்கிற பெயரில் தனியாக கேபிள் நடத்தி வருகிறார். சுமார் 2 லட்சம் கனெக்சன்களையும் அவர் வைத்துள்ளார். கேபிள் டிவி சேர்மன் ஆகியுள்ள உடுமலை ராதாகிருஷ்ணன் முதலில் தனது இணைப்புகளை அரசு இணைப்புக்கு மாற்ற வேண்டும் என்று மணிகண்டன் கூறினார்.

கேபிள் டிவி சேர்மனாக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்ற ஆப்பரேட்டர்களுக்கு முன்மாதிரியாக தனது இணைப்புகளை அரசு கேபிளுக்கு மாற்றினால் மற்ற ஆப்பரேட்டர்களும் மாறுவார்கள் என்று மணிகண்டன் தெரிவித்தார். 

எடப்பாடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணனின் தனிப்பட்ட தொழில்கள் குறித்து மற்றொரு அமைச்சரான மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசியது ஆட்சியாளர்களை அதிர வைப்பதாக  உள்ளது. இதற்கான பின்னணி குறித்து விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குதல் ஆகிய இரண்டு செயல்களுக்கு பிறகு ஆட்சியாளர்களுக்கு அதிக மாமூல் கேபிள் டிவி மூலமாகத்தான் வருகிறது. இந்த கேபிள் டிவி விவகாரத்தை ஜெயலலிதா இருந்த வரை கேபிள் டிவி சேர்மனாக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணன் கவனித்து வந்தார்.

உடுமலை 2016ல் அமைச்சரான பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு கேபிள் டிவி தலைவராக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் தான் வசூல் விவகாரத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. இதில் அமைச்சர் மணிகண்டன் மீது முதலமைச்சருக்கு அதிருப்தி ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.இதனால் தான் ஜெயலலிதா இருந்த போது கேபிள் டிவி சேர்மனாக இருந்த உடுமலை ராதாகிருஷ்ணனை மீண்டும் அந்த பதவிக்கு எடப்பாடி கொண்டு வந்ததாக சொல்கிறார்கள்.

இதில் அத்துறை அமைச்சரான மணிகண்டனை கலந்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடாகவே உடுமலைக்கு எதிராக மணிகண்டன் பொங்கியதாக சொல்கிறார்கள்.