லிட்டருக்கு ரூ.6! பால் விலையை அதிரடியாக உயர்த்திய எடப்பாடியார்! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

தமிழகத்தில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை அதிகபட்சம் 6 ரூபாய் வரை அதிகரித்து ஆவின் பால் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பசுந்தீவனம், கலப்புத் தீவனம்,  உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை கடந்த 4 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

கிராமப் பொருளாதார மேம்பாட்டில் பால் உற்பத்தி முக்கிய பங்கு வகிப்பதினையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4.60 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில்,

பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி  வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும்,  நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தவும், பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச் செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதாலும், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய்  உயர்த்தப்படும். 

பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு 19.08.2019 முதல் அமலுக்கு வரும் என ஆவின் பால் நிர்வாகம் அறிவித்துள்ளது. திடீரென பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியிருப்பது இல்லத்தரசிகளை அதிர வைத்துள்ளது. ஆனால் பால் விலை உயர்த்தப்படும் என்று ஏற்கனவே எடப்பாடியார் கூறிவிட்டார்.