கொடும் தீ விபத்து! 30 பேரின் உயிரை போராடி காப்பாற்றிய நாய்! ஆனால் பிறகு நேர்ந்த பரிதாபம்!

நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 30 பேர் உயிருடன் தப்ப காரணமாக இருந்த நாய் நெருப்பில் சிக்கி உயிரிழந்தது.


உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா நகரில் தரைத் தளத்தில் மேஜை, நாற்காலிகள் செய்யும் தொழிற்சாலையும், அதற்கு மேல் உள்ள இரு தளங்களிலும் குடியிருப்புகளும் இருந்தன. அவற்றில் பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் வசித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தரைத் தளத்தில் உள்ள தொழிற்சாலையில் மின் கசிவால் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. தீ வேகமாகப் பரவியதையடுத்து குடியிருப்பு வாசி ஒருவரால் வளர்க்கப்படும் நாய் விடாமல் குரைக்கத் தொடங்கியது. 

தூக்கத்தில் இருந்து எரிச்சலுடனே விழித்த மக்கள் வெளியில் எட்டிப் பார்த்த போது அந்த நாய் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தங்களை காப்பாற்றியுள்ளது என அதிர்ச்சிக்கிடையே உணர்ந்தனர். வீட்டில் இருந்து தப்பி ஓடி உயிர்பிழைத்த அனைவரும் கட்டப்பட்டிருந்த நாயைக் கவனிக்கத் தவறி விட்டனர். 

இந்நிலையில் தங்கள் அனைவரின் உயிரை காப்பாற்றிய நாயைக் காப்பற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு மக்கள் செல்வதற்குள் தொழிற்சாலையில் இருந்த சில்ண்டர் ஒன்று வெடித்ததில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. 30 பேரின் உயிரை காப்பாற்றிய நாயை  காப்பாற்ற முடியவில்லையே என வேதனைப்படுவதை தவிர அவர்களால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை