நீலப்படங்களில் நடித்தது ஏன்..? மியா காலிஃபாவுடன் ஒரு உரையாடல்

மியா காலிஃபா என்ற பெயரைக் கேட்டாலே கிளுகிளுப்புதான் நினைவுக்கு வரும். ஆனால், அவருக்குப் பின்னே எத்தனை வேதனை, வலி என்பதை உணரும் வகையில், BBC Hard Talk நிகழ்வில் மியா காலிஃபா பேசியிருக்கிறார்.


இந்த உரையாடலில் இருந்து குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் நிவாஸ் சுதன் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் தந்திருக்கிறார் பூ.கொ.சரவணன். 

நேர்முகம் செய்பவர்: வணக்கம் நான் ஸ்டீபன் சேக்குர். இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளப்போகும் விருந்தினர் மியா காலிஃபா. 16 மில்லியன் followers உடன் instagram -ல் உலா வருகிறார். அவருடைய பெயரை கூகுள் செய்த கணக்கில் அடங்காத சுட்டிகள் காணக் கிடைக்கும். இப்படி உலகப்புகழ் பெட்ரா ஒருவராகத் திகழ்வதைக் குறித்து மியா பெருமைப்படவில்லை. இந்தப் புகழ் 2014-ல் போர்ன் துறையில் பணியாற்ற அவர் செய்து கொண்ட மூன்று மாத ஒப்பந்தத்தால் கிட்டிய ஒன்று.

இத்துறையை விட்டு வெளியேற முடிவு செய்வதற்கு முன்பு வரை 12 காணொளிகளில் மட்டுமே அவர் பங்களித்து இருந்தார். அதில் ஒன்று உலகளவில் அதிர்வலைகளைக் கிளப்பியது. இஸ்லாமிய ஹிஜாப் அணிந்தபடி அவர் உடலுறவில் ஈடுபடுவதாக ஒரு காணொளி காட்சிப்படுத்தப்பட்ட இருந்தது. அது பலத்த கண்டனங்கள், கொந்தளிப்பை சம்பாதித்துக் கொடுத்தது. ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

லெபனான் நாட்டில் கிறிஸ்துவப் பெற்றோருக்கு பிறந்த மியா சிறுமியாக இருக்கும் போது குடும்பத்தோடு அமெரிக்காவின் மேரி லாண்ட் பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டார். இளம்வயதில் பாதுகாப்பின்மையால் சூழப்பட்டவராக, கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுப்பவராகத் திகழ்ந்த மியா தனக்கு நேர்ந்தவை குறித்து மனம்திறந்து உரையாட இருக்கிறார்

நே: எப்படிப் பார்த்தாலும் நீங்கள் மிகவும் புகழ்பெற்ற பெண்மணி. 16 மில்லியன் பேர் உங்களை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். ஆனால் , இந்தப் புகழிற்கு நீங்கள் போர்ன் துறையில் குறுகிய காலம் ஈடுபட்டதே காரணம். இதை எதிர்கொள்வது உங்களுக்குக் கடினமான ஒன்றாக இருக்கிறதா?

மியா : ஆமாம். நான் அத்துறையை விட்டு வெளியேறியதும் என்னுடைய இன்ஸ்டா கணக்கை அழித்தேன். இல்லை. சரியாகச் சொல்வது என்றால், ஐ எஸ் ஐ எஸ் ஆதரவாளர்கள் என்னுடைய கணக்கை கைப்பற்றி, அதில் தங்களுடைய பரப்புரைகளைப் பதிந்து கொண்டே இருந்தார்கள். இன்ஸ்டாகிராம் அந்தக் கணக்கை தூக்கிவிட்டது. இன்னொரு கணக்கை ஓராண்டிற்கு நான் உருவாக்கவில்லை. உலகம் ஏளனமாகப் பார்க்கும் ஒரு போர்ன் நட்சத்திரம் என்கிற என்னுடைய தலைவிதியை ஏற்றுக்கொண்டேன். என்னைப்பற்றி நிலவும் பார்வையை மாற்ற முயற்சி செய்யலாம் என முடிவு செய்தேன். ஒரு இன்ஸ்டா கணக்கை மீண்டும் துவக்கி, வேறு நல்ல வார்த்தை தோன்றவில்லை என்பதால் influencer ஆக முயன்றேன் எனச் சொல்லலாம்.

நே: உங்கள் பெயரை வேலை நிமித்தமாகக் கூகுள் செய்தால் “போர்ன்ஸ்டார்’” என்று தான் உடனே வருகிறது. இதனை எவ்வளவு முயன்றாலும் உங்களால் கடந்துவிட முடியாத இல்லையா? எவ்வளவு மெனக்கிட்டாலும்

மியா: இது ஈவிரக்கமற்றதாகத் தோன்றுகிறது. நான் அதனைக் கடந்து வர முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.

நே: நீங்கள் அப்படித்தான் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவதாகச் சொல்லவில்லை. அப்படிதான் இணையம், தொழில்நுட்பம் இயங்குகிறது என்கிறேன்

மியா : கூகுளுக்கு எனக்கும் நல்ல உறவு இல்லை என்பது உண்மை தான். அதனை மாற்ற முயன்று கொண்டே இருக்கிறோம். நான் நடத்துவதாக அறிவித்துக் கொள்ளும் ஒரு தளத்தோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதனை எந்த வகையிலும் நான் கட்டுப்படுத்தவில்லை. என்னைக் குறித்த விக்கிபீடியா பக்கத்திலும் மியாவின் அதிகாரப்பூர்வ தளம் அது என்றே குறிப்பிடுகிறார்கள். அந்தத் தளத்தை முடக்கச் சட்டப்படி பலமுறை முயன்று பார்த்தாகிவிட்டது. பலமுறை தளத்தை மூட அவர்கள் கேட்பதை தருவதாகப் பேசியும் ஆகிவிட்டது. ஒன்றும் மாறவில்லை.

நே: ஒவ்வொன்றாகப் பேசுவோம். எப்படி லெபனான் நாட்டில் பிறந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து நன்றாகப் படித்து டெக்ஸாஸ் பல்கலைக்குள் நுழைந்த நீங்கள் போர்ன் துறைக்குள் அகப்பட்டுக் கொண்டீர்கள்?

மியா: தாழ்வு மனப்பான்மை பாகுபாடு பார்க்காமல் எல்லாரையும் ஆட்கொள்கிறது என்று நினைக்கிறேன். செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தீர்களா, பெரிய பின்புலம் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தீர்களா என்பதை எல்லாம் பார்த்துத் தாழ்வுமனப்பான்மை வருவதில்லை. நான் குழந்தையாக இருக்கும்போது பருமனாக மட்டுமே இருந்தேன்.

கவர்ச்சிமிக்கவளாக அல்லது ஆண்களை வசீகரிக்கும் தகுதி கொண்டவளாக உணர்ந்ததே இல்லை. சிறு சிறு மாற்றங்களைச் செய்த போது, கல்லூரி முதல் ஆண்டில் நான் எடை இழக்க ஆரம்பித்தேன். பட்டப்படிப்பை முடித்த போது ஆளே மாறியிருந்தேன். கிட்டத்தட்ட 50 பவுண்ட் எடை குறைந்த போதும், என் மார்பகங்கள் குறித்தே அதீதமாகக் கவனம் செலுத்தினேன். இந்த எடையை எப்படிக் கிலோகிராம் கணக்கில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை

நே: அது உங்களின் உடற்தோற்றத்தையே மாற்றியிருக்கும் இல்லையா?

மியா: ஆமாம். என்னுடைய மார்பகம் ஏன் இப்படி இருக்கிறது என்பதே மிகப்பெரிய கவலையாக அரித்துக் கொண்டிருந்தது. எது இயல்பான அளவோ அந்தளவுக்கு என்னுடைய மார்பகத்தை மாற்ற முயன்றேன். அது ஒருவழியாக நடந்ததும், ஆண்களின் எல்லாக் கவனமும் என் மீது குவிந்தது. இதை எல்லாம் அதற்குமுன்பு எதிர்கொண்டதே இல்லை. இப்படித் தாழ்வுணர்ச்சியில் உழன்று கொண்டிருந்துவிட்டு முதன்முறையாகக் கிடைத்த அங்கீகாரம், புகழ் மொழிகள் என்னைப் பரவசம் கொள்ள வைத்தன. அதனை இழந்துவிடக்கூடாது என்று விரும்ப ஆரம்பித்தேன்.

நே: முதன்முறை சாலையில் யாரோ கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்த உங்களைப் பார்த்து “போர்ன் தொழிலில் ஈடுபட விருப்பமா” என்று கேட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வேண்டாம் என்று சொல்லாமல் எது இதற்குள் நுழைய உங்களை உந்தித்தள்ளியது?

மியா: அப்படி யாரும் கேட்கவில்லை. அதற்கு மாறாக, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. மாடலிங் பண்ண விருப்பமா. உங்க உடல்வாகு அப்படி அசத்தலா இருக்கு. நீங்க nude modeling பண்ணா பிரமாதமா இருக்கும்” என்று பேசினார்கள். நான் ஸ்டூடியோவிற்கு வந்தேன். மியாமியில் அந்த இடம் இருந்தது. அது பார்வைக்கு அவ்வளவு அழகாகக் காட்சியளித்தது.

அவ்வளவு சுத்தமாக இருந்தது. வேலை பார்த்தவர்கள் எல்லாரும் அவ்வளவு கனிவாக நடந்து .கொண்டார்கள். அவர்களின் அறைகளில் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்கள் காணப்பட்டன. எனக்குச் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் எதுவுமே இல்லை. எதுவும் என்னைச் சங்கடப்படுத்தவில்லை. முதல் முறை போர்ன் படம் எடுக்கவைக்கவில்லை. “இந்த ஒப்பந்தத்தில் இங்கே கையெழுத்து போடு இன்னும் பிற” என்றே நகர்ந்தது. இரண்டாவது முறை தான் படம் பிடித்தார்கள்

நே: உலக அனுபவம் இல்லாத இளம்பெண்களை வேட்டையாடும் நபர்கள் பற்றிக் குறிப்பிட்டதால்கேட்கிறேன். மேற்சொன்னவை நடந்த போது உங்களுக்கு 21 . இப்போது உங்களுக்கு 26 வயதாகிறது. வயது. இந்தக் கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கையில் ‘நான் இப்படிப் போய்ப் பலியானேனே’ என்கிற உணர்வு ஏற்படுகிறதா? அந்த 21 வயது பெண்ணை அவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டாரகள், அவள் பாதிக்கப்பட்டவள் என்று தோன்றுகிறதா?

மியா: தன்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளும் கருவிகள் அப்போது அவள் வசம் இல்லை என்றே உணர்கிறேன். அவளிடம் பொய்களை அள்ளி வீசுகிறார்கள் என்று அவளுக்குத் தெரியவில்லை. பொய்கள் என்பதைவிட அவர்களுக்கு ஏற்றவாறு அவளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். தங்களுக்கு வேண்டியதை அவளைக்கொண்டு முடித்துக் கொண்டார்கள்.

உண்மையில் என்னைப் பாதிக்கப்பட்டவள் என்று கருதவில்லை. அந்த வார்த்தை எனக்குப் பிடிக்கவில்லை. நான் எடுத்த முடிவுகள் மோசமான முடிவுகள் என்றாலும் அம்முடிவுகளை நான் தான் எடுத்தேன். பெண்கள் அணுகப்படுகிற விதம் மாறவேண்டும் என்று எண்ணுகிறேன்.

நே: பல கோடிகள் புரளும் துறை. இதன் உயிர்நாடியாகக் கேமிராவின் முன்னால் கலவியில் ஈடுபட வேண்டுமென்று பணிக்கப்பட்ட, அதற்கு ஒப்புக்கொண்ட இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் இருக்கிறார்கள். பல கோடி பேரால் பார்க்கப்படும் இந்தக் காணொளிகளின் உருவாக்கத்தை எந்தளவிற்கு உங்களால் கட்டுப்படுத்த இயலும்?

மியா : கிட்டத்தட்ட எதுவுமே இல்லை. அதிகபட்சம் இந்த மேலாடையை அணிய மாட்டேன் என்றுசொல்லலாம். எதைப் படம் பிடிக்கிறார்கள், அதன் உள்ளடக்கம், பேசுபொருள், எங்குப் படம்பிடிக்கப்படும் என்று எதையும் நாங்கள் முடிவு செய்ய முடியாது.

நே: இவற்றைப் பார்க்கும் வெளியாளாக இதில் ஈடுபடுபவரின் ஒப்புதல் அடிப்படையான, முக்கியமான கொள்கையாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பாத பாலியல் செயலை உங்களை அவர்கள் செய்யச் சொன்னால் ….

மியா: இல்லை. அவர்களால் உங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. இல்லவே இல்லை.

நே: சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சுவாரசியமாகப் பேசியிருந்தீர்கள். இந்தப் பாலியல் காணொளிகளுக்காக இயங்குகையில், மொத்தமாக எல்லாமே இருண்டு போனதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என்றும், திரும்பி பார்க்கையில் பல விஷயங்களைத் தெளிவாக நினைவுகூர முடியவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். இந்தத் துறைக்குள் ஆழமாகக் கால் பதிக்க ஆரம்பித்த போது உங்கள் மண்டையில் என்ன ஓடிக்கொண்டிருந்தது

மியா: அந்தப் பேட்டியின் போது எனக்கு அகப்படாமல் போன சொல்- அட்ரினலின். என்னுடைய அட்ரினலின் சுரப்பி அதீதமாகச் சுரந்து எனக்கு என்ன நடக்கிறது என்பதோ, நான் என்னவெல்லாம் செய்வேன் என்று கற்பனை செய்தேனோ அதனைத் தாண்டி என்னென்னவோ செய்து கொண்டிருந்தேன் என்று எண்ணுகிறேன். தலைக்கு ஏறிய அட்ரினலினால் எதையும் திரும்பிப்பார்க்கையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக நினைவுகூர முடியவில்லை.

நே: இதைப்பற்றியெல்லாம் இப்போது பேசுவது சங்கடமாக இருக்கிறதா?

மியா: ஆமாம் ஓரளவிற்கு

நே: நீங்கள் அரேபிய வம்சாவளியில், லெபனானில் பிறந்தவர். அரேபிய கலாசாரம் ஒட்டுமொத்தமாகப் பழமைவாதத்தில்ஆழமாகத் தோய்ந்து போன ஒன்று. அந்தக் கட்டுப்பாடுகள் நிறைந்த படலத்தை உரித்து எறிந்து விட்டு இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டியிருந்ததா?

மியா: இருக்கலாம். இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதி எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு, என்னுடைய எல்லைகளை, பண்புகளைத் தாண்டி எதையேனும் செய்ய வேண்டும் என்கிற விருப்பத்தில் என்னையே நான் அதிரவைக்கிற செயல்களில் ஈடுபட்டேன் என்று எண்ணுகிறேன்.

நே: இது உங்கள் குடும்பத்துக்குத் தெரியாதில்லையா?

மியா: நான் என்ன செய்கிறேன் என்று அவர்களுக்குத் தெரிந்ததும் என்னை மகளே இல்லை என்று தலைமுழுகி விட்டார்கள்.

நே: அது பெருந்துயரமாக இருந்திருக்கும் இல்லையா

மியா: இந்த உலகம் மட்டுமல்ல என்னுடைய குடும்பம், என்னைச் சுற்றியிருந்த மனிதர்கள் எல்லாரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இந்தத் துறையை விட்டு வெளியேறிய பின்னர்த் தான் நான் இன்னமும் தனிமையானவளாக உணர்ந்தேன். சில தவறுகளை மன்னிக்க முடியாது என்று உணர்ந்துகொண்டேன் என்கிறேன். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும். இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை.

நே: இந்தத் துறையின் இன்னொரு வகையான இயங்கியல் குறித்துச் சொல்லுங்கள். இந்த அதிகாரம், ஆதிக்கம், பணம். ஆபாசமான ஆண்கள், பெண்கள் குறித்துப் பேசினோம். உங்களுக்குத் தெரிந்தவரை இந்தத் தொழிலில் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் பெண்கள் இருக்கிறார்களா?

மியா: நிச்சயமாக. இத்துறைக்குள் வருபவர்கள் நெருக்கமாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர் இனிமையானவர், மரியாதைமிக்கவர், கண்ணியமானவர… விற்பனை, வரிப் பக்கம் பல பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எப்படி இந்தவேளைக்கு வந்து சேர்ந்தார்கள் என்று கேட்பேன். வாய்வழி செய்தியா? இல்லை நண்பர்களின் மூலமா என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

நே: இந்தத் துறையின் பணம் கொழிக்கும் பக்கம் அசாதாரணமானது இல்லையா? நீங்கள் இஸ்லாமிய ஆடையான ஹிஜாப் அணிந்து கொண்டு தோன்றும் காணொளி pornhub ல் வெளிவந்தது. அதன்மூலம் நீங்கள் நம்பர் 1 போர்ன் நடிகையாக ஆனீர்கள். நீங்கள் நடித்த காணொளிகளைப் பல கோடி பேர் கண்டார்கள். அந்த 12 காணொளிகளுக்கும் உங்களுக்கு மொத்தமாக 12,000 டாலர் மட்டுமே தரப்பட்டது. ஆனால், நீங்கள் பணியாற்றிய Bang Bros நிறுவனம் மற்றும்pornhub இரண்டும் கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டின. ஏன் இப்படி?

மியா: அது அப்படித்தான். எனக்கு மட்டும் இப்படிச் செய்தார்கள் என்றில்லை. எனக்கு மட்டும் மோசமான ஒப்பந்தமோ, மேலாளரோ கிடைத்தார் என்றில்லை. எனக்கு என்று மேலாளர், ஏஜென்ட் இருந்தார்கள். ஆலோசகர்கள் யாருமில்லை. யாருமே இல்லை.

நே: இல்லையா? உங்களுக்கு 21 வயது தான் ஆகிருந்தது. குழந்தைப்பருவத்தைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு கடந்த உங்களுக்கு ஆலோசனை சொல்ல யாருமில்லையா?

மியா : இல்லை. மனித மூளை முழுமையாக வளர்ச்சியடைய 25 வயதாகும். என்னுடைய மூளையில் இருந்த முடிவெடுக்கும் பகுதி முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும், எது தவறு என்றெல்லாம் சொல்ல யாருமே இல்லை.

நே: இது போர்ன் தொழிலின் பண்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நீங்கள் ஒரு காணொளியில் தோன்றுவீர்கள். அது சாசுவதமாக இருக்கும். பல லட்சம் பேர் காண்பார்கள். எவ்வளவு நீங்கள் பிரபலம் ஆனாலும், நம்பர் 1 நாயகி என்று ஆனாலும் எந்த உரிமையும் உங்களுக்குக் கிடையாது. எகிறிக்கொண்டிருக்கும் உங்கள் புகழால் உங்களுக்கு ஒரு பயனுமில்லை.

மியா : ஆமாம். ஒன்றுமே கிடைக்காது. இன்றுவரை இந்த ஒப்பந்தங்கள் இப்படித்தான் போடப்படுகின்றன.

நே: இதைப்பற்றிப் பேசியே ஆகவேண்டும். நான் முதலிலேயே நீங்கள் ஹிஜாப் அணிந்து தோன்றிய காணொளி குறித்துப் பேசினேன். அதில் உங்களைத்தவிர மூன்று இளைஞர்களும் தோன்றினார்கள். அது பின்னர்க் கலவி காட்சியாக மாறுகிறது. அது உசுப்பேற்றக் கூடிய ஒன்று என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

மியா: “நீங்க என்னைக் கொல்ல பாக்குறீங்க” என்று நான் சொன்னேன். அவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.

நே: நீங்கள் ஏன் இதில் நடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை..

மியா :அச்சுறுத்தல். நான் பயந்து போயிருந்தேன். நான் முடியாது என்று சொன்னால் அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்த போவது கிடையாது என்று எனக்குத் தெரியும். அப்படி அவர்கள் கட்டாயப்படுத்தினால் அது வன்புணர்வு. என்னை யாரும் கட்டாயப்படுத்திப் புணரப்போவதில்லை. ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது … மனந்திறந்து பேச படபடப்பாக இருந்தது. நீங்கள் ஒரு உணவகத்துக்குப் போகிறீர்கள். சிப்பந்தி “எப்படி இருக்கு சாப்பாடு எல்லாம்?” என்று கேட்கிறார். “சாப்பாடு நல்லாவே இல்லை” என்று முகத்தில் அறைந்தாற்போலச் சொல்ல யோசிப்பீர்கள் இல்லையா. நான் பயந்து போயிருந்தேன். பதற்றமாகஉணர்ந்தேன்.

நே: ஆண்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிற இத்துறையில் அந்த ஆண்களுக்கும், 21 வயது இளம் நடிகைக்கும் இடையேயான அதிகார இயங்கியலில் விருப்பம் என்கிற கருத்தாக்கத்துக்கு அர்த்தமே இல்லை என்கிறீர்களா.

மியா : அதேதான் நான்கு ஆண் தயாரிப்பாளர்கள் இருக்கிற அறையில் நீங்கள் ‘என்னைக் கொல்ல பார்க்கிறீங்க’ என்கிற ரீதியில் எதையோ சொல்கிறேன். அவர்கள் வாய்விட்டு சிரிக்கிறார்கள். அது எதோ ஒரு வகையில் உலுக்கிவிடுகிறது. அதற்குப்பிறகு பேசவோ, மீண்டும் எதையாவது சொல்லவோ வாயே வராது. நிறுவனத்தின் தலைவர், CEO எல்லாம் உட்கார்ந்து கொண்டு ஒப்பந்தத்தைப் படிக்கச் சொல்வார்கள். அவர்கள் முன்னே உட்கார்ந்து கொண்டு படிக்கையில் ஒன்றுமே மண்டைக்கு ஏறாது. யாரோ நம்மை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணமே பதற்றத்தை எகிற வைக்கும்.

நே: நீங்கள் படத்தளத்தை விட்டு வெளியேறியதும் இது பேரிடராக மாறப்போகிறது என்று மனம் எச்சரித்ததா?

மியா: அட்ரினல் தலைக்கேறி இருந்ததால் எனக்கு அப்போது ஒன்றுமே தோன்றவில்லை. அது வெளிவந்த நாள் என் மொத்த உலகமும் சின்னாபின்னம் ஆகியிருந்தது. நான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறேன் என்று என்னை அறிந்தவர்கள் யாருக்கும் தெரியாது என்பதால் தான் இதில் இயங்கிக்கொண்டு இருந்தேன்.

பலலட்சம் பெண்கள் தாங்கள் கலவியில் ஈடுபடுவதைப் படமாக எடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வெளியே வருவதே இல்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டு கொள்வதுமில்லை. அவர்கள் யாரென்று யாருக்கும் தெரிவதில்லை. என்னுடைய அசுத்தமான சிறு ரகசியம் என்னோடு மட்டுமே இருக்கும் என்பதாலேயே இதில் இருந்தேன். இந்தக் காணொளி எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது.

நே: அது படத்தைத் தயாரித்தவர்கள், வெளியிட்டவர்கள் பார்வையில் பெரும்வெற்றி. எடுத்த உடனே லட்சக்கணக்கான பேர் பார்த்திருந்தார்கள்.

மியா: என்னை “குடுவைக்குள் ஒளிரும் மின்னல் என்று அழைத்தார்கள்.

நே: உங்கள் வாழ்க்கையின் யதார்த்தமோ வேறு. ஹிஜாப் அணிந்த போர்ன் நட்சத்திரத்தின் முகம் உலகத்துக்கே தெரிந்திருந்தது.

மியா: ஆமாம் . நிறையக் கொலை மிரட்டல்கள் ஐ எஸ் ஐ எஸ் அனுதாபிகள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் இருந்து குவிந்தது. நான் தலை துண்டித்துக் கிடப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, ‘அடுத்து நீ தான்டி’ என்று நாள் குறித்தார்கள்.

நே: தனியாளாக இதை எதிர்கொண்டிருப்பீர்கள். உங்கள் குடும்பத்தோடு கூட இதைப்பற்றிப் பேச முடியாது என்பது உங்களை வெலவெலத்து போக வைத்திருக்கும் அல்லவா?

மியா : இல்லையில்லை. பயமாகத்தான் இருந்தது. ஆனால், அதனை நகைச்சுவையோடு தான் எதிர்கொண்டேன். அந்த மிரட்டலுக்கு வேடிக்கையாக இப்படிப் பதில் சொன்னேன், “என் மார்பகங்களை வெட்டாதவரை ஒன்றும் பிரச்சினையில்லை. அவை விலை மதிப்பில்லாதவை” .

நே: இது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் வாழ்க்கையே சின்னாபின்னம் ஆகியிருந்தது என்று சொன்னீர்கள். நீங்கள் செய்ததற்கு எந்தளவுக்குத் தனிப்பட்ட அளவில் பொறுப்பெடுத்துக் கொள்வீர்கள்.

மியா: 100 % நான் தான் பொறுப்பு. நான் எடுத்த முடிவு. அந்தத் துறை குறைகளால் ஆனது பெண்கள் இந்தக் குழிக்குள் விழாமல் தடுக்க நாம் எதையாவது செய்ய வேண்டும். ஆனால், இறுதியாக அந்த முடிவு என்னுடைய முடிவு.

நே: உங்களைப் பணம் கொட்டுகிற இயந்திரமாகத் தான் பார்த்தார்கள் இல்லையா. உங்களுக்கு என்று ஆலோசகர்கள், வழக்கறிஞர் என்று யாருமே இல்லையா?

மியா: அப்படித்தான் பார்த்தார்கள். 21 வயதில் எந்தப் பெண்ணுக்கு ஆலோசகர், வழக்கறிஞர் எல்லாம் இருக்கிறார் சொல்லுங்கள்.

நே: இது எவ்வளவு மன அழுத்தத்தை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளவே கேட்கிறேன். இது நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நீங்கள் இப்போது சலனமில்லாமல் காணப்படுகிறார்கள். அதனைக் கடந்து வந்திருப்பீர்கள். ஆனாலும், அந்த மன உளைச்சலில் ரணங்கள் இன்னமும் இருக்கின்றனவா

மியா: ஆமாம். குறிப்பாகப் பொது இடங்களுக்குப் போகிற போது அந்த உளைச்சல் என்னை நெரிக்கிறது. என்னை அப்படியே மக்கள் வெறித்துப் பார்க்கிறார்கள். என்னுடைய ஆடைக்குள் துளைத்துக் கொண்டு பார்ப்பதாக உணர்கிறேன். எனக்குள் ஆழமான அவமானத்தை அது உண்டாக்குகிறது. நான் எப்படி உணர்கிறேன் தெரியுமா? எனக்கென்று இருந்த அக உரிமை (privacy) எதுவும் கிடையாது. நான் இவர்களுக்கு ஒரு கூகுள் தேடல் தூரம் மட்டுமே..

நே: இந்தப் புகைப்படங்களை நீங்கள் இணையத்தில் இருந்து அகற்ற முடியாது. அது உங்களுடைய மனதுக்கு உளைச்சலை தரும் ஒன்று என்றாலும் யாருடைய பார்வையில் இருந்தும் அவற்றைக் காணடிக்க முடியாது. இதே நிலைமைதான் பிற போர்ன் நடிகர்களுக்கும் இல்லையா?

மியா: நான் கண்முன் இதனைக் காண்கிறேன். சமீபத்திய நேர்முகத்திற்குப் பின்பு பலர் தொடர்பு கொள்கிறார்கள். பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்ட பெண்கள், போர்ன் துறைக்குள் இழுத்து வரப்பட்டவர்களின் கேவல்கள் அவை. எப்படி இந்தப் பெண்களின் வாழ்க்கை சீரழிந்துபோயிருக்கிறது என்றும், இந்த ஒப்பந்தங்களால் ஆண்கள் மட்டும் எப்படிக் கொழிக்கிறார்கள் என்றெல்லாம் தெரியவருகிறது.

இவையெல்லாம் “நாம வெளிப்படையா பேசுனதால என்னைப்போலவே உணருற மத்த பொண்ணுங்க கூடப் பேச முடியுது” என்று தோன்றவைக்கிறது. என்னளவிற்கு ஆழமாகக் காயப்படாவிட்டாலும், பாதுகாப்புணர்வு இல்லாமல் தவிப்பது, தாங்கள் விரும்பாத ஒன்றை கட்டாயத்தின் பேரில் செய்வதைப் புரிந்து கொள்கிறார்கள்.

நே: உங்களுக்கு இந்தத் தளம் கிடைத்து இதைக்குறித்து எல்லாம் பேசுகிறீர்கள். கடந்த காலத்தில் இருந்து வேறுபட்டுச் சமூகம் எப்படிப் போர்னோகிராபியை பார்க்கிறது என்பதையும், அதில் ஈடுபடுபவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் மாற்ற முனைகிறீர்கள் எனக்கருதலாமா ?

மியா : பெண்கள் எப்படிப் போர்ன் துறைக்குள் இழுத்து வரப்படுகிறார்கள் என்பது மாற்றப்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். பெண்களாகவே விரும்பினால் மட்டுமே உள்ளே வர முடியும், அவர்களை யாரும் அழுத்தம் தந்து இழுத்து வரமுடியாது என்று நிலைமை மாற வேண்டும். அங்கேயே, அதே இடத்தில் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று கட்டாயப்படுத்த இயலாது. அதனை ஒரு வழக்கறிஞர் படித்துப் பார்க்க வேண்டும், பொறுமையாக வீட்டில் சில நாட்கள் படித்துப் பார்த்துவிட்டு ஒப்புக்கொள்ள வசதி வேண்டும்.

நே: உலகம் முழுக்கப் பல்வேறு நாடுகள் ‘போர்ன்மயமாக்த்தில்’ சிக்குண்டு கிடக்கின்றன. அதுவும் குறிப்பாக இளைஞர்கள் இவற்றில் மூழ்கிப்போவது ஆண், பெண் இருதரப்புக்கும் இடையேயான உறவை, அணுகும் விதத்தைப் பெருமளவில் அரித்து அழிக்கிறது என்கிற பார்வை ஒரு தரப்பிடம் நிலவுகிறது . உங்களின் பார்வை என்ன ?

மியா : நிச்சயமாகப் போர்ன் உறவுகளைச் சீர்குலைக்கிறது. போர்ன் வீடியோக்களைப் பார்த்துவிட்டு அதனையே தங்கள் வாழ்வினில் வரும் பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்ப்பது அபத்தமானது. காணொளியில் காண்பிக்கப்படுவது உண்மையில்லை. அவ்வளவு கச்சிதமானவர் யாருமில்லை. ஒரு புதன்கிழமை இரவு இத்தகைய நம்ப முடியாத செயல்களைக் காதலிக்கும் ஒருவரிடம் யாராலும் செய்ய முடியாது.

நே: நாம் நிறையப் பேசிவிட்டோம். கரடுமுரடான பயணமாக இருந்திருக்கும். மிகக் குறுகிய காலம் இருந்த ஒரு துறையில் இயங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்னமும் உலா வருவதைக் கடந்து வேறுபட்ட வாழ்க்கையை, உங்களைப் போர்னில் ஈடுபட்டவர் என்கிற கோணத்தில் இருந்து பார்க்காத உறவுகளை அடைந்திருக்கிறீர்கள் அல்லவா?

மியா: என்னைப்பற்றி எதுவுமே கேள்விப்பட்டிருக்காத ஒரு ஆணை கண்டடைந்தது பெரும்பேறு. அது அற்புதமானது. நாங்கள் பேச ஆரம்பித்த பிறகு, இதைக்குறித்துச் சொன்னேன். “நாம் பேச ஆரம்பித்த பிறகு உன்னைப்பற்றித் தேடினேன். 5 மில்லியன் பேர் பின்தொடரும் உன்னைப்பற்றிக் கூகுள் செய்யாமல் இருக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை” என்று அவர் சொன்னார்.

என்னுடைய கடந்த காலத்திற்குப் பிறகு டேட்டிங் செய்வது கடினமானதாக இருந்தது. ஆண்கள் யாரும் கிடைக்கவில்லை என்றல்ல பொருள். அதற்குள் மூழ்கிப்போய் இருக்காதா ஒருவரை கண்டடைவது சவாலானதாக இருந்தது. புரியும் என்று எண்ணுகிறேன்.

நே: 21 வயது மியாவை ஃபுளோரிடா நகரத்தில் நிறுத்தி ‘நீங்கள் அழகாக இருக்கீங்க நீங்க அட்டகாசமா தெரியுறீங்க. எங்ககூடச் சேர்ந்து வேலை செய்வீங்களா’ என்று ஒரு இளைஞன் நிறுத்தி பேசுகையில், மியாவிடம் நீங்கள் பேச முடியும் என்று வைத்துக் கொள்வோம். என்ன சொல்வீர்கள்?

மியா: உன்னுடைய பர்ஸில் இருக்கும் ஆயுதம் காத்துக்கொண்டிருக்கிறது. அதனை உபயோகப்படுத்து. அங்கிருந்து ஓடிவிடு மியா

நே: மியா காலிஃபா, hardtalk நிகழ்வில் உங்களோடு உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல.

மியா : என்னை அழைத்தமைக்கு நன்றி!