தி.மு.க.வை வளர்க்கவே சினிமாவில் நடித்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்! எம்.ஜி.ஆரின் லட்சியப்படம் நாடோடி மன்னன்!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு படித்தவர்கள் மற்றும் மேல்தட்டு மக்களிடம் மட்டுமே செல்வாக்கு இருந்தது.


 அதனை அடித்தட்டு வரையிலும் கொண்டுசெல்ல பெருமுயற்சி எடுத்தார் எம்ஜி.ஆர். அதற்காக அவர் எடுத்த சொந்தப்படம்தான் நாடோடி மன்னன். கட்சிக் கொடியை மக்களிடையே பரப்புவதற்காக, 1958-ம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தின் சின்னமாக திமுக கொடியை அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு கருப்பு, சிவப்பு கொடி என்றாலே திமுக கொடி என்று சொன்னவர்களைவிட, எம்.ஜி.ஆர். கொடி என்றவர்களே அதிகம். அதன்பிறகு வெளியான அனைத்துப் படங்களிலும் திமுக கொடியையும், அண்ணாவையும் பகிரங்கமாக முன்னிலைப் படுத்தினார். 

இந்தப் படம் ஜெயித்தால் மன்னன், தோற்றால் நாடோடி என்பதுதான் எம்.ஜி.ஆரின் நிலைமையாக இருந்தது. ஆனாலும் தைரியமாக படம் எடுத்து வெற்றியைத் தொட்டார் எம்.ஜி.ஆர். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் அண்ணாவின் படத்தைக் காட்டுவதும், தி.மு.க.வின் கொள்கைகளைச் சொல்வதும் அவரது படங்களில் தொடர்ந்து நடந்தது.

சினிமா மூலம் கட்சியை வளர்க்க முடியும், ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.