தி.மு.க.வை முதன்முதலில் ஜெயிக்கவைத்தது எம்.ஜி.ஆர்.தான். எம்.ஜி.ஆர். முகத்துக்கு 30 லட்சம் வாக்குகள்!

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை பதவியில் இருந்து இறக்கிவிட்டு தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த பெருமை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சேரும்.


ஆம், எம்.ஜி.ஆர். தான் நடித்த படங்களில், பாடல்களில் திமுக கட்சியின் சின்னம், கொள்கை, அண்ணாவை எங்கெல்லாம், எப்படியெல்லாம் இடம் பெறச்செய்ய முடியுமோ அப்படியெல்லாம் புகுத்தினார் புரட்சித்தலைவர். அவர் நடித்ததில் 76 படங்கள் 100 நாட்கள் ஓடி வெற்றி அடைந்தவை. அதேபோல் 11 படங்கள் வெள்ளிவிழா கண்டவை.

அவர் நடித்த மொத்த திரைப்படங்கள் 134. புரட்சித்தலைவரின் அத்தனை படங்களும் திமுகவின் அரசியல் வெற்றிக்கு பெரும் பங்களித்தன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதனால்தான் புரட்சித்தலைவர் தேர்தல் நிதி தருவதைவிட பரப்புரையில் அதிகம் ஈடுபட வேண்டும் என்பதைக் குறிப்பிடும் வகையில், ‘தம்பி உன் முகத்தைக் காட்டு 30 லட்சம் வாக்குகள் விழும்’ என்று குறிப்பிட்டார் அண்ணா. 

1967-ம் ஆண்டு திமுக. கூட்டணி பலத்துடன் தேர்தலை சந்தித்த நேரத்தில், அதாவது ஜனவரி 12, 1967 அன்று புரட்சித்தலைவரை துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. ஆனாலும் ஆபத்து இல்லாமல் உயிர் பிழைத்தார். புரட்சித்தலைவர் தேர்தல் பரப்புரை செய்ய முடியாத நிலையில், அவர் கழுத்தில் கட்டுப்போட்ட சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டர்தான் காங்கிரஸ் அரசை அசைத்துப்போட்டது.

புரட்சித்தலைவர் மீதான மக்கள் அபிமானம் அப்படியே ஓட்டுக்களாக மாறின. அதனால் 138 இடங்களில் வெற்றிபெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணாவை பாராட்டுவதற்கு கோவை மாவட்ட கட்சிப் பிரமுகர்கள் மாலையுடன் சென்றார்கள். அவர்களிடம் மிகவும் தெளிவாக, ‘வெற்றிக்கான முதல் மாலைக்குச் சொந்தக்காரர் மருத்துவமனையில் இருக்கிறார்..

அங்கே செல்லுங்கள்’ என்று அனுப்பிவைத்தவர். அதுதான் அண்ணாவின் பெருந்தன்மை. அதுமட்டுமின்றி அமைச்சரவை பட்டியலை மருத்துவமனையில் இருந்த புரட்சித்தலைவருக்கு அனுப்பிவைத்து ஒப்புதல் பெற்ற பிறகுதான் அண்ணா வெளியிடவே செய்தார். அந்த அளவுக்கு கட்சியிலும் மனதிலும் புரட்சித்தலைவருக்கு அண்ணா முக்கியத்துவம் கொடுத்தார்.