உள்ளாட்சித் தேர்தலில் எம்ஜிஆரும், நம்பியாரும் வாக்களித்தனர் ! வரவேற்ற கிராம மக்கள்!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலில் எம்ஜிஆர் மற்றும் நம்பியாரும் வாக்களித்தனர்.


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்றும் டிசம்பர் 30ம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டத்தை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதல் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும் முறை பின்பற்றப்படுகிறது. வெவ்வேறு பதவிகளுக்கான 4 வாக்குச் சீட்டுகளில் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 37830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 

இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சியில் எம்ஜிஆர், நம்பியார் என்ற பெயர்கள் கொண்ட நறிக்குறவர்கள் வாக்களித்தனர். திரைத்துறையில் கோலோச்சிய நம்பியார் பெயரும், திரைத்துறையிலும், அரசியலிலும் கோலோச்சிய எம்ஜிஆர் பெயரும் வைத்தள்ள நரிக்குறவர்கள் 2 பேர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.

இவர்கள் உறவுமுறையில் மாமன், மைத்துனர் என்பது கூடுதல் தகவல்.இவர்கள் தேவராயநேரி நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர்கள். இங்கு 900-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு சினிமா நடிகர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.