மெர்சலில் ரூ.10 கோடி நஷ்டம்! புதிய படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெர்சல் படம் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்த நிலையில் தயாரிப்பாளர் தலையில் தான் பெரிய துண்டு விழுந்தது.


கடந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் படம் பெரும் போராட்டத்திற்கு பிறகே வெளியானது. படத்திற்கு திட்டமிடட் பட்ஜெட்டை விட அதிகம் அட்லி செலவு செய்தார். இதனால் படத்தை முன்கூட்டியே வியாபாரம் செய்திருந்த தேனாண்டாள் பிலிம்சால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியவில்லை. அதாவது படத்திற்கு செலவு என்று குறிப்பிட்ட தொகையை கருதிக் கொண்டு அதற்கு ஏற்ப வியாபாரத்தை தேனான்டாள் பிலிம்ஸ் செய்திருந்தது.

   ஆனால் அட்லி படத்திற்கு கூறிய பட்ஜெட்டை விட சில கோடிகள் பட்ஜெட்டை அதிகமாக்கிவிட்டார். பின்னர் படம் ரிலீஸ் சமயத்தில் விலங்குகள் நல வாரியம் மூலம் ஏற்பட்ட பிரச்சனையை சரி கட்ட குறிப்பிட்ட தொகையை தயாரிப்பாளர் முரளி ராமசாமி கையில் இருந்து இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் படம் வெளியாகி வெற்றி பெற்றாலும் கூட தேனாண்டாள் பிலிம்சுக்கு சுமார் 10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.



   இதனால் தான் தேனாண்டாள் பிலிம்ஸ் கடந்த ஆண்டு பூஜை போட்ட சங்கமித்ரா படத்தை தற்போது வரை துவக்க முடியவில்லை. மெர்சலில் ஏற்பட்ட இழப்பை சரிகட்டினால் மட்டுமே பைனான்ஸ் பிரச்சனைகள் முடிந்து சுந்தர் சியின் கனவுப் படமான சங்கமித்ராவின் சூட்டிங்கிற்கே போக முடியும். போதாக்குறைக்கு எஸ்.ஜே சூர்யாவை வைத்து தேனாண்டாள் பிலிம்ஸ் பூஜை போட்ட இரவாக்காலம் படமும் பிரச்சனையல் சிக்கியுள்ளது.



   மெர்சல் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அந்த படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீள முடியாமல் தேனாண்டாள் பிலிம்ஸ் தவித்து வருகிறது. இதனால் இரவாக்காலம் படத்தையும் எப்போது எப்படி ரிலீஸ் செய்வது என்று தெரியாமல் தயாரிப்பாளர் தவித்து வருகிறார். நடிகர் விஜய் உதவிக்கரம் நீட்டினால் எல்லாம் சுபமாக முடியும் என்று அவர்கள் தரப்பு தெரிவிக்கிறது.