பச்சிளம் குழந்தைக்கு வெற்றிலையுடன் பாதரசம்! வயிறு வீங்கி உயிருக்கு போராடும் பரிதாபம்! கை வைத்திய விபரீதம்!

நாகை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் சரணவன் சுமித்ரா தம்பதி வசித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியான சுமித்ரா ஒரு வாரத்திற்கு முன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார்.


பின்னர் வீட்டிற்கு சென்றபின் ஒரு வாரத்தில் குழந்தையின் வயிறு வீங்கிவிட்டது. இதனால் அச்சம் அடைந்த சுமித்ரா குழந்தையை மயிலாடுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணித்து வந்தனர்.

பின்னர் குழந்தை கருப்பு நிறத்தில் வாந்தி எடுத்ததை அடுத்து குழந்தைக்கு என்ன உணவு கொடுத்தீர்கள் என மருத்துவர்கள் வினவி உள்ளனர். அதற்கு அவர்கள் கை வைத்தியர் அறிவுரையின் பேரில் வெற்றிலைச் சாற்றில் சிறிது பாதரசத்தை கலந்து கொடுத்ததாக கூறியதை அடுத்து மருத்துவர்கள் கோபம் அடைந்தனர்.

ஒரு வாரக் குழந்தைக்கு பாதரசத்தை கொடுக்கலாமா என பெற்றோரை கண்டித்தனர். இதை அடுத்து குழந்தையின் உடல்நிலை மோசமடையவே தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து குழந்தையை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கை வைத்தியம் மீது நம்பிக்கை வைப்பது தவறில்லை. ஆனால் அதற்கென ஒரு வயது வரம்பு உள்ளது. பச்சிளங் குழந்தைக்கு பாதாரசம் தரலாம் என எந்த நாட்டு வைத்தியர் சொன்னார் என தெரியவில்லை என உற்றார் உறவினர் ஆதங்கப்பட்டனர்.