தும்பைப்பூ செடி முழுதும் மருத்துவ பயன் கொண்டது! சளி இருமல் தலைவலி என பல நோய்களுக்கு தீர்வு!

தும்பைப்பூ செடியின் மருத்துவ பயன்கள்..


தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. சளியைக் கட்டுப்படுத்தும்; மலமிளக்கும்; கோழையகற்றும்; மாதவிலக்கைத் தூண்டும்.

தும்பை இலைச்சாறு, தலைவலி, வாதநோய் போன்றவற்றைக் குணமாக்கும். தும்பை பூ, தாகம், காய்ச்சல், கண்ணோய் போன்றவற்றிற்கு மருந்தாகும்.

தமிழகமெங்கும், கிராமங்களில் சாதாரணமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும்.

கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான, தேன்சத்து நிறைந்த நாக்கு வடிவ மலர்கள் இவற்றைக் கொண்டு தும்பைச் செடியை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

பெரும்பாலும் மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை விரும்பி வளர்கின்றது. விவசாய நிலங்களில் இந்தச் செடி மழைக்காலங்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. தும்பை இலை, பூக்கள் மருத்துவப் பயன் அதிகமானவை.

தும்பை மலர்களில் உற்பத்தியாகும் தேனைக் குடிக்க எப்போதும், எறும்பு, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிறவகைப் பூச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். தும்பை செடியைப் பிடுங்கினால் எளிதில் வேருடன் வந்துவிடும். வேரில் மண் ஒட்டாமல் வெண்மையாகவே காணப்படுவது தும்பையின் சிறப்பு அம்சமாகும். மேலும், எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் தன்மையுடையது.

கடவுள் வழிபாட்டிற்கு தும்பைப் பூக்கள் பயன்படுகின்றன. காலையில், புதிய பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத் தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகின்றன. முருகக் கடவுளுக்குத் தும்பை மலர்களால் சிறப்பாக அர்ச்சுனை செய்யப்படுவதுண்டு.

25 தும்பை பூக்களை, ½ டம்ளர் காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்க குழந்தைகளின் தொண்டையில் கட்டிய கோழை வெளிப்படும்.

10 துளிகள் அளவு தும்பை பூச்சாற்றை, காலையில் மட்டும் குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கான சளி, இருமல், விக்கல் தீரும்.

தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை குடிக்க வேண்டும். தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் செய்ய ஒவ்வாமை தீரும். தும்பைச் செடியை, இலை, பூக்களுடன் பறித்து வந்து, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.

தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 15 துளிகள் அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.

கொப்புளம், நமைச்சல், சிரங்குகள் குணமாக தும்பை இலைகளை அரைத்து, மேல் பூச்சாகப் பூச வேண்டும். 5 நாட்கள் வரை தொடர்ந்து செய்யலாம்.

பாம்புக் கடிக்கு முதலுதவி சிகிச்சை.. தும்பை இலைகளை ஒரு கைப்பிடி அளவு நசுக்கி, உள்ளுக்குள் கொடுத்து, நிறைய தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும். தும்பை இலைச்சாறு 2 அல்லது 3 துளிகள் மூக்கிலும் விடலாம். இப்படிச் செய்தால் மயக்கம் தெளியவும் விரைவாக விஷமுறிவு ஏற்படவும் வாய்ப்பு ஏற்படும்.