மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை குறைத்திடுக. அரசுக்கு மருத்துவ சங்கம் கோரிக்கை

மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை குறைப்பதுடன், முதுநிலை மருத்துவ மாணவர்களின் கல்விக்கட்டணத்தை ரத்து செய்திட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் சார்பில், பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தை, 2013 ல் சட்டமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து தமிழக அரசே ஏற்றுள்ளது. இப்பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்த ,இராஜா முத்தையை மருத்துவக் கல்லூரி ,கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும் என தமிழக அரசு, சட்டமன்றத்தில் ஏற்கனவே அறிவித்தது. அது தற்பொழுது கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

இன்னிலையில் , இக்கல்லூரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதலான கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட 2.5 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இது கண்டனத்திற்குரியது.

 கடந்த 16 ஆண்டுகளில் ரூ 2600 கோடிக்கும் மேல் அப்பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு மானியம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் அரசால் வழங்கப்பட்ட ஒட்டு மொத்த மானியத்தை விட இது அதிகம். ஒவ்வொரு ஆண்டும் ரூ 200 கோடிக்கும் மேல் மானியம் வழங்கப்படுகிறது.

இவ்வளவு அதிகமான தொகையை அப்பல்கலைக்கழகத்திற்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கிய பிறகும், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்களிடமிருந்து தொடர்ந்து மிக அதிகமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதிக அளவிலான கட்டணத்தால், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே அங்கு படிக்க முடியும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்குகிறது.இது சமூக நீதிக்கும்,ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது என்று தெரிவித்துள்ளார்.