மழை வழிவிட்டால் இந்த டெஸ்டிலும் இந்தியா ஜெயிச்சிடும் போலயே!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காம் டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.


பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்களை எடுத்துள்ளனர்.

மூன்றாம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹாரிஸ் 79 ரன்களும், கவாஜா 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால்  மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணியின் சார்பில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குலதீப் யாதவ் 3 விக்கெட்களையும், ஜடேஜா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியில் இனி மழை பெய்யவில்லை என்றால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு அதிகம். எனவே நாளைய போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த தொடரில்  ஏற்கனவே இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளதால்  இந்தியா இந்த தொடரை கைப்பற்றுவது கிட்ட தட்ட உறுதியாகிவுள்ளது